ADDED : நவ 10, 2026 04:58 AM
சேலம்; சேலம் கிச்சிப்பாளையம், குறிஞ்சிநகர் ஹவுசிங்போர்டை சேர்ந்தவர் தேவி, 45. அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல், இரவு நேரங்களில் குடித்துவிட்டு, தேவி வீட்டருகே அலப்பறையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதை, தேவி உள்ளிட்ட சில பெண்கள் தட்டிகேட்டுள்ளனர். அதனால், ஆத்திரம் அடைந்த அக்கும்பல், கடந்த செப்.,20ம் தேதி இரவில், வழக்கம்போல குடித்துவிட்டு, உருட்டுக்கட்டையுடன் வந்து, தேவி உள்ளிட்ட பெண்களை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.பாதிக்கப்பட்ட தேவி புகார்படி, அதே மாதம், 25ல், கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குபதிந்து, அப்பகுதியை சேர்ந்த முகமது, 20, பூவரசன், 26, கவுதம், 25, கார்த்திகா, 21, சுஜய், 26, கருணாஸ், 19, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
இச்சம்பவத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ரவுடி தீனா, 22, நேற்று, கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து, இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை, 7 ஆக அதிகரித்துள்ளது.
