/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை மறியலில் ஈடுபட்ட 940 பேர் கைது
/
சாலை மறியலில் ஈடுபட்ட 940 பேர் கைது
ADDED : ஜூலை 10, 2025 01:27 AM
சேலம், மத்திய அரசுக்கு எதிராக, தொழிற்சங்கங்கள் சார்பில், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய ஒரு நாள் பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நேற்று நடந்தது. சேலத்தில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., உள்பட, 9 தொழிற்சங்கத்தினர், ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில், ஈ.வெ.ரா., சிலை அருகே, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வந்த வாகனங்களை, திருவள்ளுவர் சிலை பகுதியில் ஒரு வழி பாதையாக, போலீசார் திருப்பி விட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சு நடத்தியும், மறியலை கைவிடவில்லை. இதனால், 240 பெண்கள் உள்பட, 940 பேரை போலீசார் கைது செய்தனர். பின் போக்குவரத்து தொடங்கியது.
முன்னதாக ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறியதாவது: மத்திய பா.ஜ., அரசு, 29 சட்ட தொகுப்பை, 4 ஆக சுருக்கி, தொழிலாளர்களின் அடையாளத்தை அழித்து வருவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். மீண்டும், 29 சட்ட தொகுப்பை அமல்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க சட்ட பாதுகாப்பு தேவை. இந்தியாவில் மோட்டார் தொழிலை அழிக்க, 15 ஆண்டு பயன்பாடு முடிந்த வாகனங்களை கண்டம் செய்யப்படும் என கூறுவதை தொழிலாளர் வர்க்கம் ஒருபோதும் ஏற்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோட்டை மைதானத்தில், ஜாக்டோ - ஜியோ சார்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான், சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 8வது ஊதியக்குழுவை விரைவில் அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஜான்சன்பேட்டை, எல்.ஐ.சி., கோட்ட அலுவலகம் முன், காப்பீடு கழக ஊழியர் சங்கம் சார்பில், கோட்ட தலைவர் நரசிம்மன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அஸ்தம்பட்டி தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன், சங்க தலைவர் ஆண்டோ கால்பட் தலைமையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பஸ்கள் இயக்கம்
வேலை நிறுத்த போராட்டம் நடந்தும், சேலம் மாவட்டத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. ஆட்டோக்கள், 40 சதவீதம் இயங்கவில்லை. சுமைதுாக்கும் தொழிலாளர்களில் பாதி பேர், போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் லீபஜார், பால் மார்க்கெட், ரயில்வே கூட்ெஷட் பகுதிகளில், சரக்குகளை கையாள்வதில் தாமதம் ஏற்பட்டது.