/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெயிலால் கருகும் இலை: முறிந்து விழும் வாழை
/
வெயிலால் கருகும் இலை: முறிந்து விழும் வாழை
ADDED : மே 19, 2024 03:04 AM
ஆத்துார்: ஆத்துார், பைத்துார், மஞ்சினி, நரசிங்கபுரம், அப்பமசமுத்திரம், தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் வாழை பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். அதில் பூவன், ரஸ்தாளி, மொந்தன், தேன், செவ்வாழை உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். சில வாரங்களாக வெயில் தாக்கத்தில் வாழை இலைகள் காய்ந்து வருகின்றன.
இதில் மரங்களுக்கு செல்லும் நீர் சத்து குறைந்து காய்கள் முதிர்ச்சி பெறாமல், மரம் வலுவிழந்து முறிந்து விழுகின்றன. 2 மாதங்களுக்கு முன் நடவு செய்த வாழைகள் வளர்ச்சி பெறாமல், இலைகள் காய்ந்து முறிந்து விழுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பமசமுத்திரம் விவசாயி சுந்தரம் கூறியதாவது:
வாழை மரங்கள் வெப்பம் தாங்காமல் தாருடன் முறிந்து விழுகின்றன. சிறிய, அறுவடைக்கு தயாராகி வரும் மரங்களில் இலைகள் கருகி சருகாக தொங்குகின்றன. வைகாசி, ஆனி மாத முகூர்த்த நாளில் தார் விற்க முடியாத நிலை உள்ளது. இலைகள் கருகி வருவதால் அதன் விலை உயர்ந்துள்ளது. வெப்பத்தால் வாழை விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளதால், தமிழக அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

