/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு: அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு
/
மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு: அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு
மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு: அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு
மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு: அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு
ADDED : ஆக 28, 2024 08:24 AM
சேலம்: நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறி, மாநகராட்சி கூட்டத்தில் இருந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணை கமிஷனர் பூங்கொடி, துணை மேயர் சாரதாதேவி முன்னிலை வகித்தனர். அதில் கவுன்சிலர்கள் பேசியதாவது: அ.தி.மு.க., வரதராஜ்: சில நாட்களுக்கு முன் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. மாநகராட்சி சார்பில் வீடு கட்டித்தர வேண்டும்.
தி.மு.க., முருகன்: குடிநீர், 10 நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த வேண்டும். தி.மு.க., தெய்வலிங்கம்: புதிதாக வீடு கட்டுவோர், மாநகராட்சி இடத்தையும் சேர்த்து கட்டிக்கொள்கின்றனர். அதை அளந்து, இடித்து அகற்ற வேண்டும். புதிதாக வீடு கட்டுவோர், கால்வாய்க்கு இடம்விட்டு கட்ட வலியுறுத்த வேண்டும்.
தி.மு.க., சரவணன்: வரி விதிப்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடங்களுக்கு கூட அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி: புது பஸ் ஸ்டாண்டில் நுழைவு கட்டண ஏலம், இளங்கோ என்பவருக்கு வழங்குவதாக, 8வது தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மாநகராட்சி வரியை செலுத்தாமல் இழப்பை ஏற்படுத்தியவர். இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். அம்மாபேட்டை மண்டலத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட், நேரு கலையரங்கம் ஆகியவற்றில் தேவையற்ற இடத்தில், 'லிப்ட்' அமைப்பது உள்ளிட்ட கூடுதல் செலவுகளை செய்துள்ளதால் நிதி விரயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் புது பஸ் ஸ்டாண்ட் நுழைவு கட்டண தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது. கவுன்சிலர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவதாக மேயர் அறிவிக்க கூட்டம் முடிந்தது.
இதையடுத்து யாதவமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ''மாநகராட்சியில் குடிநீர் டிபாசிட் கட்டணம், 7,500ல் இருந்து, 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சீரமைப்பு பணியில் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.