/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பருவ மழை காலத்தில் பயிரை காக்க அறிவுரை
/
பருவ மழை காலத்தில் பயிரை காக்க அறிவுரை
ADDED : அக் 25, 2025 01:09 AM
ஓமலுார், பருவமழை காலத்தில், தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காடையாம்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ப்ரியங்கா அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
மஞ்சள்: வயலை சுத்தமாகவும், வடிகால் வசதியுடனும் பராமரிக்க வேண்டும். அதிக ஈரப்பதமுள்ள காலநிலையால், மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, இலை கருகல் நோயின் தாக்கம் காணப்படும். சூடோமோனாஸ், ப்ளோரசன்ஸ் திரவ உயிர் கொல்லியை, 2 மி.லி.,க்கு, ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து, 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
வாழை: காற்றால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு, மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தலாம்.
மரங்களை சுற்றி சுத்தபடுத்தி, நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.
காய்கறி: உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். தக்காளிக்கு ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டும். நோய் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண உயிரியல் கொல்லியினை, நிலத்தில் தெளிக்க வேண்டும்.
மரவள்ளி: உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். செடியின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டுப்பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும்.

