ADDED : அக் 21, 2026 05:08 AM
சேலம்:சேலம் மாநகராட்சியில்
உள்ள, 60 வார்டுகளில் தினமும், 500 முதல், 550 டன் வரையான குப்பை
சேரிக்கப்படும். நேற்று முன்தினம், சரஸ்வதி, ஆயுத பூஜையால் வீடுகள்,
பட்டறைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளில் சுத்தம்
செய்யப்பட்டு, அதன் கழிவை குப்பைத்தொட்டி, சாலையோரங்களில்
கொட்டினர். இதனால் பிளாஸ்டிக் கழிவு, துணிகள் உள்ளிட்ட குப்பை
ஆங்காங்கே குவிந்து காணப்பட்டன.
பூஜை முடிந்து, காய்கறி கழிவு, சாலை முச்சந்திகளில்
பரவலாக திருஷ்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டிருந்தன. வாழை மரங்கள்,
சாம்பல் பூசணிகளும் சாலையோரங்களில் வீசப்பட்டன. இது
போக்குவரத்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, சுகாதார
சீர்கேடும் நிலவியது. இதனால் துாய்மை பணியாளர்கள், நேற்று காலை முதல்,
குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி மாநகர் பகுதிகளில்
கூடுதலாக, 300 டன் குப்பை அகற்றப்பட்டன. ஒரே நாளில், 2 மடங்கு குப்பை
அகற்றும் பணியில் ஈடுபட்டதால், துாய்மை பணியாளர்கள் சிரமத்துக்கு
ஆளாகினர்.
