ADDED : நவ 03, 2024 12:48 AM
சேலம், நவ. 3-
கிறிஸ்தவர்கள், இறந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களது கல்லறையில் நவ., 2ல் சிறப்பு வழிபாடு நடத்துவர். இதனால் சேலம், காக்கையன்காடு கல்லறை தோட்டத்தில், அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகளை, தனித்தனியே அவர்களுடைய குடும்பத்தினர் சுத்தம் செய்து வெள்ளையடித்தனர்.
பின் பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஏற்றி வழிபாடு நடத்தி ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர். பின் ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது. அதேபோல், 4 ரோடு சந்திப்பில் உள்ள ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்திலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அதே பகுதியில் குழந்தை இயேசு பேராலயத்துக்கு சொந்தமான கல்லறை தோட்டத்திலும் சிறப்பு ஜெபம் நடந்தது. நெத்திமேட்டில் ஜெயராகிணி கல்லறை தோட்டத்திலும், இறந்தவர்களை நினைவுகூர்ந்து பலர் வழிபாடு நடத்தினர்.
கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி, புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை லுார்துசாமி தலைமையில் மாசிலாபாளையம் கல்லறை தோட்டத்துக்கு கிறிஸ்தவர்கள் சென்றனர். பின் அங்கு அடக்கம் செய்திருந்த, கல்லறைக்கு வண்ணம் தீட்டி மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்கள் துாவி, அவர்கள் ஆத்மா சாந்தியடைய வழிபாடு செய்தனர்.
ஆத்துார், தெற்கு உடையார்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் ஏராளமானோர் வழிபட்டனர். முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்க, ஆன்மாக்கள் சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.
தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதேபோல் கெங்கவல்லி அருகே கோனேரிப்பட்டியில் உள்ள புனித சலேத் அன்னை பங்கின் கல்லறை தோட்டத்தில் திரளானோர் வழிபட்டனர்.