/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி வரும் 22 முதல் 26 வரை நடத்த ஏற்பாடு
/
ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி வரும் 22 முதல் 26 வரை நடத்த ஏற்பாடு
ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி வரும் 22 முதல் 26 வரை நடத்த ஏற்பாடு
ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி வரும் 22 முதல் 26 வரை நடத்த ஏற்பாடு
ADDED : மே 19, 2024 03:05 AM
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 47வது கோடை விழா, மலர் கண்காட்சி முன்னேற்பாடு பணி குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
அதில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:
ஏற்காட்டில், 47வது கோடை விழா, மலர் கண்காட்சி வரும், 22 முதல், 26 வரை நடக்க உள்ளது. சுற்றுலா பயணியர், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும் மகிழ்விக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலர் அலங்காரம், வண்ண மலர் தொட்டிகளால் மலர் கண்காட்சி; ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஏற்காட்டை சுற்றி துாய்மைப்பணி, தடையற்ற குடிநீர், சுகாதார வசதிகள், மகளிர் திட்டம் சார்பில் சுய உதவி குழுக்களால் உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகைகள், தேவைக்கு ஏற்ப கூடுதலாக அமைக்கவும், இரவிலும் தெரியும்படி சாலை தடுப்புகளில் வண்ணம் தீட்டுதல், பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுலாத்துறை சார்பில் பொழுதுபோக்கு அம்சம், படகு போட்டி; உள்ளாட்சி சார்பில் சுற்றுலா பயணியருக்கு அடிப்படை வசதி, போதிய அளவில் வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
சமூக நலத்துறை சார்பில் குழந்தை, மகளிருக்கு விளையாட்டு போட்டி, அடுப்பில்லா சமையல், பாரம்பரிய உணவு சமையல் போட்டி, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ், சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம், நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பாதிப்பு குறித்து சுற்றுலா பயணியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேவையான இடங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை வழங்க வேண்டும். ஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் இல்லாத கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

