/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேக்ளாவில் ஆத்தூர், கோவை குதிரைகள் முதலிடம்
/
ரேக்ளாவில் ஆத்தூர், கோவை குதிரைகள் முதலிடம்
ADDED : ஜன 18, 2024 10:14 AM
ஆத்துார்: ரேக்ளா போட்டியில் ஆத்துார், கோவை குதிரைகள் முதலிடம் பிடிக்க, அதன் உரிமையாளர்கள் பரிசு பெற்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம் ஆத்துார், உடையார்பாளையம் நண்பர் குழு சார்பில், 35ம் ஆண்டாக குதிரை ரேக்ளா போட்டி நேற்று நடந்தது. தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் தொடங்கி வைத்தார். முதலில் சிறு குதிரைகளுக்கு போட்டி நடந்தது. அதில் ஆத்துார், திருச்சி, கோவை, சேலம், பண்ணாரி, ராசிபுரம், குளித்தலை, தர்மபுரி பகுதிகளில் இருந்து, 16 குதிரைகளை, அதன் உரிமையாளர்கள் பங்கேற்கச்செய்தனர். உடையார்பாளையம் முதல் கொத்தாம்பாடி வரை, 10 கி.மீ., நிர்ணயித்து ரேக்ளா போட்டி நடந்தது.
அதில் ஆத்துார்
சரவணனின் குதிரை முதலிடம், குளித்தலை நிமிலனின் குதிரை, 2ம் இடம், சேலம் அம்மாபேட்டை மித்ராவின் குதிரை, 3ம் இடங்களை பிடித்தன. இதனால் அதன் உரிமையாளர்கள் முறையே, 20,000; 15,000; 10,000 ரூபாய் என, பரிசு வென்றனர்.
அதேபோல் பெரிய குதிரைகளுக்கு உடையார்பாளையம் முதல் தளவாய்பட்டி பிரிவு சாலை என, 14 கி.மீ., நிர்ணயித்து போட்டி நடந்தது. அதில் சேலம், ஆத்துார், நாமக்கல், கோவை பகுதிகளில் இருந்து, 10 குதிரைகளை அதன் உரிமையாளர்கள் பங்கேற்கச்செய்தனர். இதில் கோவை நவீனின் குதிரை முதலிடம், சேலம் ஜாபரின் குதிரை, 2ம் இடம், கோவை பாமாகண்ணுவின் குதிரை, 3ம் இடத்தை பிடித்தது. இதனால் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு முறையே, 25,000; 20,000; 15,000 ரூபாய் பரிசுத்தொகையை விழாக்குழுவினர் வழங்கினர்.
லேசான தடியடி
போட்டியின்போது குதிரைக்கு பின்னால் ஏராளமான பைக்குகள் அணிவகுத்து சென்றன. அப்போது ஒன்றுடன் ஒன்று மோதி, 10க்கும் மேற்பட்ட பைக்குகள் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. பைக்கில் வந்தவர்கள், லேசான காயத்துடன் தப்பினர். அதேநேரம் குதிரையுடன் வந்த போட்டியாளர்களுக்கும், பைக்குகளில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், லேசான தடியடி நடத்தி அனைவரையும் கலைந்துபோகச்செய்தனர்.