அதிக நேரம் மொபைல், 'டிவி' பார்ப்பதை தவிருங்கள்... கண் பார்வை குறைபாட்டை தடுக்க மருத்துவர் அறிவுரை
அதிக நேரம் மொபைல், 'டிவி' பார்ப்பதை தவிருங்கள்... கண் பார்வை குறைபாட்டை தடுக்க மருத்துவர் அறிவுரை
ADDED : நவ 21, 2026 04:46 AM
சேலம்; ''தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன்களை அதிகம் பார்க்கின்றனர். இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு பார்வை குறைபாடு வரலாம். இதை தடுக்க, அதிக நேரம் மொபைல், 'டிவி', கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்,'' என,
'தி ஐ பவுண்டேஷன்' மருத்துவமனை மருத்துவர் பானுபவித்ரா
அறிவுறுத்தினார்.
உலக நீரிழிவு தினத்தை ஒட்டி, 'காலைக்கதிர்' நாளிதழ், 'தி ஐ பவுண்டேஷன்' கண் மருத்துவமனை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, சேலம் ஆறுநாட்டு வேளாளர் சங்கம் இணைந்து, சீல
நாயக்கன்பட்டி ஆறுநாட்டு வேளாளர் பேலஸ் திருமண மண்டபத்தில், 'கண்களை நேசி' பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. குறிப்பாக, 'நீரிழிவு நோய்க்கு ஆரம்பகால நடவடிக்கை' விழிப்புணர்வு மற்றும் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. 'காலைக்கதிர்' பொது மேலாளர் ஜெரால்டு வரவேற்றார்.
'காலைக்கதிர்' ஆசிரியர் ராமச்சந்திரன், 'தி ஐ பவுண்டேஷன்' கண் மருத்துவமனை பொது மேலாளர் செந்தில்குமார், மருத்துவர் பானுபவித்ரா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி, சேலம் ஆறுநாட்டு வேளாளர் சங்க செயலர் ஹரிஹரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
மருத்துவமனை பொது மேலாளர் செந்தில்குமார் பேசுகையில், ''காலைக்கதிர் நாளிதழுடன் இணைந்து வணிகர்களுக்கு கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்துவது பெருமையான நிகழ்வு,'' என்றார்.
பேரமைப்பின் மாவட்ட தலைவர் பெரியசாமி பேசுகையில், ''காலைக்கதிருக்கும், வணிகர் சங்க பேரமைப்புக்கும் நீண்ட கால நட்பு உண்டு. மனித உடல் உறுப்புகளில் முக்கியமானது கண். அதை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும், 'காலைக்கதிர்' நிர்வாகத்துக்கும்,
'ஐ பவுண்டேஷன்' கண் மருத்துவ
மனைக்கும் நன்றிகள்,'' என்றார்.
மருத்துவமனையின் மருத்துவர் பானுபவித்ரா பேசியதாவது:
நாற்பது வயதை தாண்டியவர் களுக்கு தான் சர்க்கரை நோய் வரும் என்ற நிலை மாறி, பிறந்த குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் என எல்லோருக்கும், இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது. சர்க்கரை நோய் வந்தால், முதலில் பாதிப்பு ஆளாகும் உறுப்பு கண். அடுத்து இதயம், சிறுநீரகம், ரத்த நாளங்கள்.
நாட்டில், 1 கோடி பேருக்கு சர்க்கரை நோய் வந்தால், அவர்களில், 35 லட்சம் பேர், பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயால் பாதிக்கப்பட்ட, 3 பேரில் ஒருவருக்கு பார்வை குறைபாடு உள்ளது. இதற்கான அறிகுறி, திடீரென கரும்புள்ளிகளாக தெரிவது, கண்களில் ரத்தம் கசிவது தான். இவை தெரியும் முன்பே, 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றால், 5 ஆண்டுக்கு ஒருமுறை, 40 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், 6 மாதங்களுக்கு ஒருமுறை, விரிவான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
சர்க்கரை நோய் இருப்பதை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து, உரிய சிகிச்சை மேற்கொண்டால் பார்வை குறைபாட்டை தடுக்கலாம். பார்வை குறைபாட்டையும் துவக்கத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் முழுமையாக சரிசெய்யலாம். நோய் முற்றிய பின் வந்தால், 50 சதவீதம் மட்டுமே பார்வையை திரும்ப பெற முடியும்.
தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன் அதிகம் பார்க்கின்றனர். இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு பார்வை குறைபாடு வரலாம். இதை தடுக்க, அதிக நேரம் மொபைல், 'டிவி', கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து பார்க்க வேண்டி இருந்தால், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒரு நிமிடம், அவற்றில் இருந்து பார்வையை விலக்கி, துாரத்தில் உள்ள பொருட்களை மாறி மாறி பார்க்க வேண்டும். இப்படி செய்வதால் கண்களில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இதையடுத்து அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, வணிகர் சங்க பேரமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி, செயலர் வர்கீஸ், பொருளாளர் சந்திரதாசன், ஆறுநாட்டு வேளாளர் சங்க செயலர் ஹரிஹரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இலவச பரிசோதனை
சேலம், ஈரோடு, நாமக்கல், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள, ' தி ஐ பவுண்டேஷன்' கண் மருத்துவமனை கிளைகளில், வரும், 30 வரை இலவசமாக கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தவிர லேசர் பார்வை திருத்த சிகிச்சையான, 'ஸ்மைல்' மற்றும் அதிநவீன துல்லிய கண்புரை அறுவை சிகிச்சை எல்.ஆர்.சி.எஸ்., ஆகிய நவீன சிகிச்சை முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விபரங்களுக்கு, 93619 09413, 63690 00687 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
