ADDED : அக் 16, 2024 07:01 AM
சேலம்: சேலம், களரம்பட்டி, காளி கவுண்டர் காட்டை சேர்ந்தவர் வெள்ளைசாமி, 27. இவரது நண்பர் தருண். இருவரும் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் மதியம் மது அருந்தினர். அப்போது அந்த வழியே வந்த ஒருவர், வெள்ளைசாமியிடம் மதுபானம் கேட்டார்.
அவர் மறுத்துவிட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர், பீர் பாட்டிலால் வெள்ளைசாமி கழுத்துப்பகுதியில் குத்தினார். படுகாயம் அடைந்த அவரை, நண்பர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். வெள்ளைசாமி புகார்படி செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்து, செவ்வாய்ப்பேட்டை நெய் வண்டி, அருணாசல தெருவை சேர்ந்த காஜா என்பவரை கைது செய்தனர்.
தட்டிக்கேட்டவர் மீது தாக்கு:
அதேபோல் பூலாவரி, கீழ்காட்டை சேர்ந்தவர் சக்திவேல், 32. உறவினர் கணேசனுடன், அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே கடந்த, 13ல் நடந்து சென்றார். அப்போது பள்ளி அருகே இருவர் மது அருந்திக்கொண்டிருந்ததை பார்த்து தட்டிக்கேட்டார். மது அருந்திய இருவரும் சேர்ந்து சக்திவேலை தாக்கினர். காயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த சதீஷ், கோவிந்தராஜை தேடுகின்றனர்.