/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விளைச்சல் பாதிப்பால் வரத்து சரிவு 'சதம்' அடித்தது பெரிய வெங்காயம்
/
விளைச்சல் பாதிப்பால் வரத்து சரிவு 'சதம்' அடித்தது பெரிய வெங்காயம்
விளைச்சல் பாதிப்பால் வரத்து சரிவு 'சதம்' அடித்தது பெரிய வெங்காயம்
விளைச்சல் பாதிப்பால் வரத்து சரிவு 'சதம்' அடித்தது பெரிய வெங்காயம்
ADDED : நவ 10, 2024 01:31 AM
விளைச்சல் பாதிப்பால் வரத்து சரிவு
'சதம்' அடித்தது பெரிய வெங்காயம்
சேலம், நவ. 10-
மழையால் பெரிய வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் அதன் விலை உயர்ந்து கிலோ, 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக், புனே, கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில், பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து தான் தமிழகத்துக்கு பெரும்பாலும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த மாநிலங்களில் மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சேலம் லீ பஜார் மார்க்கெட் வெங்காய மொத்த வியாபாரி ஆனந்த் கூறியதாவது:
கர்நாடகா, ஆந்திராவில் ஆகஸ்ட் முதல் தற்போது வரை மழைப்பொழிவால் வயலில் தண்ணீர் தேங்கி வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கும் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பெரிய வெங்காயத்தை விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்வதில்லை.
இருப்பினும் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பொள்ளாச்சி, பல்லடம் பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் அங்கிருந்து, 4 ஆண்டுகளாகவே சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து இல்லை. தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விளைவிக்கப்படும் வெங்காயமும் அறுவடை செய்ய ஒரு மாதமாகும்.
வழக்கமாக சேலம் லீ பஜார் மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிராவில் இருந்து தினமும், 300 டன் வெங்காயம்(மூட்டை, 50 முதல், 55 கிலோ) கொண்டு வரப்படும். மழையால், 150 டன் மட்டும் கொண்டு வரப்படுகிறது. இதனால் அதன் விலை உயர்ந்துள்ளது.
கர்நாடகா, ஆந்திரா வெங்காயம் கடந்த மாத இறுதியில் மூட்டை, 1,000 முதல், 1,500 ரூபாய் வரை விற்றது, தற்போது, 2,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. மஹாராஷ்டிரா வெங்காய மூட்டை, 2,000க்கு விற்றது தற்போது, 4,000 ரூபாயாக எகிறியுள்ளது.
கர்நாடகா, ஆந்திரா புது வெங்காயம், சில்லரை விற்பனையில் கிலோ, 50 முதல், 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதிலும் மஹாராஷ்டிரா பழைய வெங்காயம் தான், சில்லரை விலையில் கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தீபாவளி முடிந்த பின், கிலோ, 20 முதல், 35 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் சின்ன வெங்காயம், சேலம் சுற்றுவட்டார பகுதிகள், நாமக்கல், ராசிபுரம், வெண்ணந்துார், பொம்மிடி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரத்து உள்ளது. உழவர் சந்தைகளில் கடந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோ, 50 முதல், 54 ரூபாய் வரை விற்றது, நேற்று, 55 முதல், 58 ரூபாய்க்கு விற்பனையானது.