ADDED : பிப் 26, 2024 07:00 AM
சென்னை : பா.ஜ., கூட்டணியில் த.மா.கா., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை இணைப்பது தொடர்பான பேச்சை, அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் அர்விந்த் மேனன்
துவங்கியுள்ளார்.
தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியை பலப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, அக்கட்சி தலைமை துவக்கியுள்ளது. பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளை இணைக்க ரகசிய பேச்சு நடந்து வருகிறது. பா.ம.க., தே.மு.தி.க., இன்னும் பிடிகொடுக்கவில்லை. அ.தி.மு.க., பா.ஜ., இடையே, முறிந்த கூட்டணியை ஒட்ட வைக்கும் வேலைகளில், த.மா.கா., தலைவர் வாசன் இறங்கினார். அவரது முயற்சி எடுபடவில்லை. இதைத்தொடர்ந்து, பா.ஜ., கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க த.மா.கா., முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழக பா.ஜ., மேலிட தேர்தல் பொறுப்பாளர் அர்விந்த் மேனன் தலைமையிலான குழுவினர், நேற்று இரவு சென்னை வந்தனர். வாசனை சந்தித்து பேச்சு நடத்தினர். இதையடுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே., நிறுவனர் பச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாத யாதவ் ஆகியோரையும்
சந்தித்தனர்.
பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் என் மண்; என் மக்கள் நிறைவு விழாவில் பங்கேற்க, நான்கு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டணி குறித்த முடிவை, இன்று அறிவிக்கப் போவதாக, த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
இதன்பின் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அளித்த பேட்டியில், ''லோக்சபா தேர்தலில், நாங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்; தாமரை சின்னத்தில் தேர்தலை சந்திக்க உள்ளோம். பா.ஜ.க., கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அ.தி.மு.க., இதுவரை பிரதமர் வேட்பாளராக யாரை ஆதரிப்பர் என தெரிவிக்கவில்லை. தேர்தலுக்கு பின் பிரதமராக நரேந்திர மோடியை கூட அவர்கள் ஆதரிக்கக்கூடும்,''
என்றார்

