/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் பனிமூட்டத்தால் படகு சவாரி நிறுத்தம்
/
ஏற்காட்டில் பனிமூட்டத்தால் படகு சவாரி நிறுத்தம்
ADDED : டிச 04, 2025 06:09 AM

ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று அதிகாலை முதல் பனிமூட்டம் நிலவியது. தொடர்ந்து காலை, 9:00 மணி முதல், ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதி களில் பனி மூட்டத்துடன் கூடிய மித மழையாக தொடங்கி நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாக ஓட்டிச்சென்றனர். படகு இல்லத்தில் ஏரி முழுதும் தெரியாத நிலை ஏற்பட்டதால் படகுகளை இயக்க முடியவில்லை. இதனால் படகு இல்ல நிர்வாகம், அதன் சேவையை நிறுத்தியது. இதனால் மழையை பொருட்படுத்தாமல் அங்கு வந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆத்துாரில் மழை
ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசிங்கபுரம், தலைவாசல், தம்மம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கனமழை பெய்தது. காலை, 7:00 முதல், 1:00 மணி வரை, சாரல் மழையாக பெய்தது. பள்ளி மாணவ, மாணவியர், மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். குளிர் காற்றும் வீசியது. தொடர்ந்து பெய்த மழையால், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆணையாம்பட்டி, கடம்பூர், தெடாவூர், கூடமலை, வீரகனுார் உள்ளிட்ட இடங்களில், நேற்று மாலை, கனமழை பெய்து இரவு வரை கொட்டியது.
வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி, கருமந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

