/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்; சுகவனேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
/
கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்; சுகவனேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்; சுகவனேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்; சுகவனேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
ADDED : டிச 04, 2025 06:09 AM

சேலம்: கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி, சேலம் சுகவனேஸ்வரர் உள்பட பல்வேறு கோவில்களில் தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்த, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.தமிழகம் முழுதும் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட பின், கோவில்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். அதன்படி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், ஸ்தம்ப மண்டபத்தில், தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள், 'அரோகரா' கோஷம் எழுப்பி தீபத்தை வழிபட்டனர்.
தொடர்ந்து மூலவர் சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஸ்வாமி மற்றும் அம்பாள் உற்சவர் சிலைகள், மேளதாளம் முழங்க, கோவிலுக்கு வெளியே எழுந்தருளினர். கோவில் எதிரே உள்ள இடத்தில், பனை ஓலைகளால் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட சொக்கப்பனைக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமி முன்னிலையில், சொக்கப்பனைக்கு தீ மூட்டப்பட்டது.
'திகுதிகு'வென பற்றி எரிந்ததில், எழுந்த தீப்பிழம்பை, சிவபெருமானாக கருதி, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். சொக்கப்பனை எரிந்து முடிந்ததும், அதன் சாம்பலை, பக்தர்கள் திருநீறாக நெற்றியில் பூசிக்கொண்டனர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் உத்தமசோழபுரம் கரபுரநாதர், கந்தாஸ்ரமம் முருகன், சேலம் டவுன் காசி விஸ்வநாதர், ஊத்துமலை முருகன் உள்பட சேலத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் மகா தீபம் ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஓமலுார், செவ்வாய் சந்தை அருகே உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் முன் உள்ள விளக்கு துாணில் மகாதீபம் ஏற்பட்டது. மூலவர் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிேஷகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. ஓமலுார் கடைவீதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், சொக்கப்பனை கூம்பு ஏற்றப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டது.
ஆத்துார் அடுத்த தம்மம்பட்டி, திருமண்கரடு மலையிலுள்ள, பாலதண்டாயுதபாணி கோவில் வளாகத்தில், 12 அடி உயர பீடத்தில், 4 அடி உயர செம்பு கொப்பரையில், 500 லிட்டர் நெய், எண்ணெய் ஊற்றப்பட்டு, மஹா தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். வடசென்னிமலை பாலசுப்ரமணியர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
சிறப்பு அலங்காரம்
சங்ககிரி சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில், வள்ளி, தெய்வானை, ஆறுமுகவேலர் சுவாமிக்கு பல்வேறு திவ்ய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் உள்ள சுப்ரமணியர் சுவாமிக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.
பரணி தீபம்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யபட்டது. அதேபோல் சிவகாமசுந்தரி, முருக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். தொடர்ந்து மாலை, 6.30 மணிக்கு, மூலஸ்தானம் முன் பரணி தீபம் ஏற்றும் சட்டையை வைத்து, புண்ணியாதானம், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. பூசாரி, அந்த தீபத்தை கையில் ஏந்தி, சுவாமிக்கு காட்டி, கோவில் இரு உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து அங்கிருந்து வரதராஜ பெருமாள், ஆழடி விநாயகர், வேலாயுதசுவாமி, இளமேஸ்வரர், பத்ரகாளியம்மன், ஓடை விநாயகர் கோவில்களுக்கு சென்று, தேர் செல்லும் வீதியில் வந்து, கோவிலில் நிறைவு செய்தனர். ஏராளமான பக்தர்கள், 'அரோகரா' கோஷம் முழங்க பரணி தீபத்தை தரிசித்தனர். இன்று இரவு, 8:00 மணிக்கு, கோவில் முன் சொக்கப்பனை(கூம்பு), 5 நிலை கொண்ட ராஜகோபுர உச்சியில் இருந்து கொடிசேலை எரியூட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
அண்ணாமலையார் கோவில்
ஏற்காடு, தலைச்சோலை கிராமத்தில், கடல் மட்டத்தில் இருந்து, 1,400 மீட்டர் உயரத்தில் உள்ள மலை உச்சியில், அண்ணாமலையார் கோவில் உள்ளது. அங்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபம் ஏற்றும் நேரத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 500 லிட்டர் நெய், 10 மீட்டர் காடா துணியால் ஆன திரியை பயன்படுத்தி ஏற்றிய தீபம், தொடர்ந்து, 3 நாட்கள் எரியும். பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்த நிலையிலும், அதை பொருட்படுத்தாமல் மலைக்கிராம மக்கள், தீபத்தை வணங்கினர். முன்னதாக காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு பூஜை நடந்தது. மதியம், அண்ணாமலையார் தேரோட்டம் நடந்தது.
போக்குவரத்து நெரிசல்
பஸ் வசதி இல்லாத நிலையில், பக்தர்கள், இரு, நான்கு சக்கர வாகனங்களில், அண்ணாமலையார் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறைந்த அளவில் இருந்த போலீசாரால், நெரிசலை சரிசெய்ய முடியவில்லை. இதனால், 2 கி.மீ., கடக்க, வாகன ஓட்டிகளுக்கு, 45 நிமிடத்துக்கு மேல் ஆனது.

