ADDED : நவ 28, 2024 01:15 AM
புத்தக திருவிழா நாளை தொடக்கம்
சேலம், நவ. 28-
சேலத்தில் புத்தக திருவிழா நாளை தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணியை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாநகராட்சி திடலில், புத்தக திருவிழா, நவ., 29 முதல், டிச., 9 வரை நடக்க உள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைக்க உள்ளார். எம்.பி., - எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
தினமும் காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை கண்காட்சி நடக்கும். இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம், புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்கும்படி, 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் தன்னம்பிக்கை ஊக்க பேச்சாளரான, மதுரை ராமகிருஷ்ணன் பேச உள்ளார். 2ம் நாளில் நாஞ்சில் நாடன், 'பசியும், சுவையும்' தலைப்பிலும், என தொடர்ந்து தினமும் பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் பங்கேற்க உள்ளனர். வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தக திருவிழாவிற்கு அனைத்து தரப்பினரும் வந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம் உள்பட பலர் உடனிருந்தனர்.v