UPDATED : அக் 17, 2026 04:52 AM
ADDED : அக் 17, 2026 04:10 AM

மேட்டூர்: மேட்டூர் நகராட்சியில், 134 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
அவர்கள், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; பி.எப்., பிடிப்பதில் நடக்கும் நிதி மோசடியை தடுத்தல்; தீபாவளி போனஸ், 8.33 சதவீதம் வழங்குதல்; தினமும் காலை உணவுப்படி, 100 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 5ல், நகராட்சி அலுவலகம் முன் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். 3 நாட்களுக்கு பின், மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.அப்போது நகராட்சி கமிஷனர் சபாநாயகம் பேச்சு நடத்தி, அக்., 15க்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால் நேற்று முன்தினம் மாலை வரை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த துாய்மை பணியாளர்கள், நேற்று காலை, 7:00 மணிக்கு மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சின்னபார்க் சென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை, 4:00 மணி வரை போராட்டம் நீடித்த நிலையில், வரும், 22ல் பேச்சு நடத்தி தீர்வு காண்பதாக, நகராட்சி நிர்வாகம் கூறியதால், துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர்.
