/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகைக்காக தம்பதி கொலை; பீஹார் நபர் சுற்றிவளைப்பு
/
நகைக்காக தம்பதி கொலை; பீஹார் நபர் சுற்றிவளைப்பு
ADDED : மே 12, 2025 11:42 PM

சேலம் : சேலம், ஜாகீர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை தெருவைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் பாஸ்கரன், 70, அவரது மனைவி வித்யா, 65, ஆகியோர் நேற்று முன்தினம், வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததில், சுத்தியல் கைப்பற்றப்பட்டது. அதில் அடித்து தம்பதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தனிப்படை போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு நபர் கடைக்கும், பாஸ்கரன் வீட்டிற்கும் செல்வதும், அவர், அதே பகுதியில் வசிக்கும் பீஹாரை சேர்ந்த சந்தோஷ், 34, என்றும் தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், தம்பதியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
போலீசார் கூறியதாவது:
டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான சந்தோஷுக்கு, மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்ப செலவிற்காக பலரிடமும் கடன் பெற்றுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். பாஸ்கரன் கடைக்கு, அடிக்கடி செல்லும் சந்தோஷ், தம்பதி நகை அணிந்திருப்பதை பார்த்துள்ளார்.
அவர்களிடம் நகை பறிக்க திட்டமிட்ட சந்தோஷ், நேற்று முன்தினம் மதியம் சுத்தியுடன் சென்றுள்ளார். முதலில் வித்யாவையும், பின், சத்தம் கேட்டு வந்த பாஸ்கரனையும் தாக்கியுள்ளார். இருவரும் நிலை குலைந்து விழுந்தவுடன், நகைகளை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார்.
சந்தேகம் வரக்கூடாது என, தாலிச்செயினை விட்டு சென்றார். எங்கும் தலைமறைவாகாமல், போலீசுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். கேமரா பதிவால் சிக்கிக் கொண்டார். அவரிடம், 10.5 சவரன் நகை மீட்கப்பட்டது. கொலை நடந்த ஐந்து மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.