ADDED : அக் 11, 2024 07:06 AM
ஓமலுார்: ஓமலுார் அருகே தொளசம்பட்டி, மணக்காட்டூரை சேர்ந்தவர் சிவக்குமார், 51. தொளசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி கவிதா, அதே பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.நேற்று பள்ளி முடிந்து, மாலை, 5:00 மணிக்கு, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டு பள்ளிக்கு வெளியே சிவக்குமார் வந்துள்ளார்.
அப்போது எதிரே, உறவினரான தொளசம்பட்டி, நெசவாளர் காலனியை சேர்ந்த கனகராஜ், 50, சைக்கிளில் வந்து சிவக்குமார் பைக்கை மறித்தார். பின் கனகராஜ், கொடுவாளால் அவரை வெட்டினார். தடுத்த சிவக்குமார் கையில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கனகராஜை, தொளசம்பட்டி போலீசார் கைது செய்தனர்.