/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முனியப்பனுக்கு அசைவ படையலுடன் சிறப்பு பூஜை ஆடிப்பெருக்கால் குவிந்த பக்தர்கள்
/
முனியப்பனுக்கு அசைவ படையலுடன் சிறப்பு பூஜை ஆடிப்பெருக்கால் குவிந்த பக்தர்கள்
முனியப்பனுக்கு அசைவ படையலுடன் சிறப்பு பூஜை ஆடிப்பெருக்கால் குவிந்த பக்தர்கள்
முனியப்பனுக்கு அசைவ படையலுடன் சிறப்பு பூஜை ஆடிப்பெருக்கால் குவிந்த பக்தர்கள்
ADDED : ஆக 04, 2025 08:16 AM
சேலம்: ஆடிப்பெருக்கை ஒட்டி, சேலம், அய்யந்திருமாளிகையில் உள்ள, 'பூட்டு' முனியப்பன் கோவிலில் நேற்று காலை சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து, புது வேட்டி அணிவித்து பரிவட்டம் கட்டி சர்வ அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் ஊரை காக்கும் காவல் தெய்வமான முனியப்பனுக்கு நன்றி தெரிவிக்கும்படி, அவருக்கு பிடித்த ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து வித அசைவ கறிகள், மது பாட்டில்களுடன் படையலிட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.அதேபோல் குரங்குச்சாவடி அருகே வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் சிறப்பு அபி ேஷகம் செய்து பரிவட்டம் கட்டி எலுமிச்சை மாலை அணிவித்து, ஆடு, கோழிகளை பலியிட்டு, சமைத்து படையல் வைத்து வழிபட்டனர். சேலம், அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் உள்ளிட்ட அனைத்து முனியப்பன் கோவில்களில், படையல் வைத்து பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வழிபட்டனர்.
ஆத்துார் வெள்ளைப்பிள்ளையார் கோவிலில் சுவாமிக்கு பல்வேறு அபி ேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல் ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர், சம்போடை வன மதுரகாளியம்மன், கைலாசநாதர், பெரியமாரியம்மன், உடையார்பாளையம் முத்துமாரியம்மன், விநாயகபுரம் சமயபுரத்து மாரியம்மன், வடசென்னிமலை பாலசுப்ரமணியர், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன், ஆறகளூர் அம்பாயிரம்மன், காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. புதுமண தம்பதியர் உள்பட ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
ஓமலுார் கடைவீதி பெரிய மாரியம்மன், வெள்ளி கவசத்தில் அருள் பாலித்தார். சுமங்கலி பெண்கள், பூஜையில் வைக்கப்பட்ட தாலிக்கயிற்றை வாங்கிமாற்றிக்கொண்டனர். மேலும் அம்மனுக்கு கூழ், பிரசாதங்கள் படையலிட்டு வழிபட்டனர். சிலர் அம்மன் சன்னதியில் கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீர்த்தக்குட ஊர்வலம்மகுடஞ்சாவடி மகுடேஸ்வரி கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி, நேற்று காலை, கூடலுார் முத்து முனியப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள், தீர்த்தக்குடங்களை வைத்து சந்தனம், குங்குமம், மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்தனர். பின் தீர்த்த குடங்களை எடுத்து, முக்கிய வீதிகள் வழியே கோவிலை அடைந்தனர். பின் மகுடாம்பிகை சமேத மகுடேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
மலையை சுற்றி தேரோட்டம்
தாரமங்கலம், மாட்டையாம்பட்டி அருகே வைரமுனீஸ்வரன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. சிறு தேரில் விநாயகர், பெரிய தேரில் வைரமுனீஸ்வரன் சுவாமியை எழுந்தருள செய்தனர். தொடர்ந்து மலை மீது உள்ள வைரமுனீஸ்வரன் கோவில் மலையை சுற்றி, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்று, கோவிலில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
தாரமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில், வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மஞ்சள் காப்பு அலங்காரம் செய்து வேப்பிலையால் மாலை அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது.
கரையோரம் 'வெறிச்'
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் கரையோரங்களில் குளிக்கவும், குல தெய்வ பூஜை பொருட்களை சுத்தப்படுத்தவும் வருவாய்த்துறையினர் தடை விதித்தனர். சிலர் மட்டும் தடையை மீறி காவிரி ஆற்றங்கரையோரம் குளித்து குலதெய்வ சிலைகளை சுத்தம் செய்து வழிபட்டனர். காவிரி ஆற்றில் குளிக்க அனுமதிக்காததால், ஆற்றின் கிழக்குக்கரை வாய்க்கால் பகுதிகளான ஓணாம்பாறை, பில்லுக்குறிச்சி, குள்ளம்பட்டி பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் ஏராளமான மக்கள் புனித நீராடினர்.