/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நரசிங்கபுரம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குமுறல்
/
நரசிங்கபுரம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குமுறல்
நரசிங்கபுரம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குமுறல்
நரசிங்கபுரம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குமுறல்
ADDED : டிச 02, 2025 02:23 AM
ஆத்துார்,அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்க முடியாததற்கு, எதற்கு கவுன்சிலர் பதவி என, நரசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் பேசினர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம், நேற்று தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடந்தது. இதில், 11 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
அ.தி.மு.க., கவுன்சிலர் கோபி: தார்ச்சாலை அமைத்தபோது, நகராட்சி அலுவலர்கள் அதன் தரம் குறித்து ஆய்வு செய்யவில்லை. ஒரு மாதத்திற்கு முன் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை 'பல்லை' காட்டி வருகிறது. வார்டு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினால், அடுத்த முறை சரி செய்வதாக கூறுகிறீர்கள். ஏற்கனவே தீர்மானத்தில் வைத்துள்ள பணிகளை மேற்கொள்ளவில்லை எனில், அடுத்த முறை கூட்டத்தில் கவுன்சிலர்கள் பங்கேற்கமாட்டோம்.
கமிஷனர் பவித்ரா: தார்ச்சாலை பணிகள் குறித்து ஆய்வு செய்து, வார்டு பிரச்னை சரி செய்யப்படும்.
அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ்: புதிய வீட்டுவசதி வாரியம் பகுதியில், சாக்கடை கழிவுநீர் வெளியேற்ற பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும், அதற்கான பணிகள் நடக்கவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி வருகிறது.
தலைவர் அலெக்சாண்டர்: சாக்கடை கழிவுநீர் வழிப்பாதை விரைவில் அமைக்கப்படும்.
கவுன்சிலர்கள் தி.மு.க., புஷ்பாவதி, அன்னக்கிளி மற்றும் அ.தி.மு.க., சரண்யா: எங்கள் வார்டு பகுதியில் சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. பலமுறை கேட்டாலும் பலனில்லை. அடிப்படை வசதிகள் செய்யாத நிலையில், நாங்கள் எதற்கு கவுன்சிலராக இருக்க வேண்டும். எங்களுக்கு எதற்கு கவுன்சிலர் பதவி. மக்களிடம் இதை பற்றி சொல்வதற்கு, எங்களுக்கே அசிங்கமாக உள்ளது.
தலைவர் அலெக்சாண்டர்: கவுன்சிலர்கள் தெரிவித்துள்ள குறைகளை, சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம்
நடந்தது.

