/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., கிளை செயலர் சுட்டுக்கொலை
/
தி.மு.க., கிளை செயலர் சுட்டுக்கொலை
ADDED : நவ 23, 2025 02:13 AM

பெ.நா.பாளையம்: கல்வராயன்மலையில், மனைவியுடன் பைக்கில் சென்ற தி.மு.க., கிளை செயலர், நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து, அவரது சகோதரர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி, கிராங்காடை சேர்ந்தவர் ராஜேந்திரன், 45; தி.மு.க., கிளை செயலரான இவர், முன்னாள் வனக்குழு தலைவராகவும் இருந்து வந்தார்.
இவரது மனைவி சரிதா, 40; சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகள்கள் கோகிலா, 24, பரிமளா, 21, மகன் நவீன், 19.
நேற்று முன்தினம், இரவு, 8:30 மணியளவில், கருமந்துறையில் இருந்து பைக்கில் சரிதாவுடன், ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வீட்டிற்கு அருகே வந்தபோது, ராஜேந்திரனை நோக்கி நாட்டு துப்பாக்கியால் அங்கிருந்த நபர் சுட்டுள்ளார்.
இதில், சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். நிலப்பிரச்னை காரணமாக, அதே பகுதியை சேர்ந்த பங்காளி உறவு முறையான ராஜமாணிக்கம், 37, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாக, கரியக்கோவில் போலீசில் சரிதா புகார் அளித்தார். போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், ராஜமாணிக்கம், 37, அவரது அண்ணன் பழனிசாமி, 40, ஆகியோரை, தனிப்படை போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் தலைமையிலான போலீசார், இருவரிடமும் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:
ராஜேந்திரனுக்கும், ராஜமாணிக்கத்துக்கும் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இதுதொடர்பாக, 2016ல், ஆத்துார் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடக்கிறது. சரிதா, தன் கணவரை, நிலப்பிரச்னையில் ராஜமாணிக்கம் சுட்டதாக புகார் அளித்துள்ளார்.
மேலும் இரவு நேரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் யார் என, அடையாளம் தெரியவில்லை என்றும் கூறுகிறார். ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோரை, சந்தேக நபராக அழைத்து விசாரிக்கிறோம். கொலை குற்றவாளி என யாரையும் அடையாளப்படுத்தவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் தலைமையிலான போலீசார், கொலை செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, 50 அடி துாரத்தில் நாட்டு துப்பாக்கி கிடந்தது. அவற்றை பறிமுதல் செய்து பார்த்தபோது, துப்பாக்கி குண்டு 'லோடு' செய்யப்பட்டு இருந்தது.
கொலை செய்ய வந்த கும்பல், இந்த துப்பாக்கியை எடுத்து வந்தனரா என, போலீசார் விசாரிக்கின்றனர். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை, போலீசார் தேடி வருகின்றனர்.

