/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது ரக பலா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
புது ரக பலா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : மார் 15, 2024 03:54 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 10,000 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களான மலர்கள், காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தோட்டக்கலை அலுவலர்கள், புது வகை பயிர்களை சாகுபடி செய்ய தேவையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
அவகேடோ, செடி வகை அத்தி, டிராகன் பழம், கோல்டன் சீதா போன்ற பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் வியட்னாம் சூப்பர் குட்டை ரக பலா சாகுபடி செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறியதாவது:
வியட்னாம் சூப்பர் குட்டை ரக பலா, நடவு செய்த, 18 மாதங்களிலேயே காய் உற்பத்தியாகும். ஒரு மரத்தில் முதல் ஆண்டில், 10 காய்கள், 2, 3ம் ஆண்டுகளில், 20 காய்கள், 4, 5ம் ஆண்டுகளில், 50 காய்கள் வரை காய்க்கும். ஆண்டுக்கு இருமுறை மகசூல் தரும். பக்க ஒட்டு அல்லது குருத்து ஒட்டு முறையில் இனவிருத்தி செய்யலாம். தினமும், 6 - 8 மணி நேரம் நேரடியாக வெயில் படும் இடத்தில், 18 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். தென்னை மர தோப்புகளில் ஊடு பயிராகவும் பலா நடவு செய்து, கூடுதல் வருவாய் பெறலாம். கம்மாளப்பட்டி, அடிமலைப்பட்டி பகுதிகளில் வியட்னாம் பலா சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர். விபரங்களுக்கு, 96002 84443 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

