/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரியில் 300க்கும் மேற்பட்ட இறந்த கோழிகள் வீச்சு விவசாயிகள் அதிர்ச்சி; மர்ம நபர்கள் குறித்து விசாரணை
/
ஏரியில் 300க்கும் மேற்பட்ட இறந்த கோழிகள் வீச்சு விவசாயிகள் அதிர்ச்சி; மர்ம நபர்கள் குறித்து விசாரணை
ஏரியில் 300க்கும் மேற்பட்ட இறந்த கோழிகள் வீச்சு விவசாயிகள் அதிர்ச்சி; மர்ம நபர்கள் குறித்து விசாரணை
ஏரியில் 300க்கும் மேற்பட்ட இறந்த கோழிகள் வீச்சு விவசாயிகள் அதிர்ச்சி; மர்ம நபர்கள் குறித்து விசாரணை
ADDED : மே 07, 2025 01:58 AM
வாழப்பாடி:
தொட்டில் ஏரியில், 300க்கும் மேற்பட்ட இறந்த பண்ணை கோழிகளை, மர்ம நபர்கள் வீசியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அதேநேரம் ஏரி பாழ்பட்டு தண்ணீரை பயன்படுத்த முடியாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த வலசையூர் ஊராட்சியில் உள்ள தொட்டில் ஏரியில், நேற்று முன்தினம் மாலை துர்நாற்றம் வீசியது. மக்கள் பார்த்தபோது, 300க்கும் மேற்பட்ட, பண்ணை கோழிகள் இறந்து மிதந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஊராட்சி செயலர் சாமிநாதன் சென்று பார்த்தார். பின், இரவு, 8:00 மணி வரை, ஊராட்சி பணியாளர்கள் மூலம், 100க்கும் மேற்பட்ட இறந்த கோழிகள் அப்புறப்படுத்தப்பட்டன.
நேற்று காலை, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீராணம் போலீசார், சுகாதாரத்துறையினர், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய கமிஷனர் திருவேரங்கன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பணியாளர்கள், பரிசலில் சென்று ஏரியில் கிடந்த, 200-க்கும் மேற்பட்ட இறந்த கோழிகளை அப்புறப்படுத்தி, ஏரி கரையோரம், பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி புதைத்தனர். ஏரியில் மீன் பிடிக்க உரிமம் பெற்றுள்ள, உடையாப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரவுடிகள் கோஷ்டி மோதல்
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
இறந்த கோழிகளை கொட்டியதால், ஏரியில் தேங்கியிருந்த தண்ணீர், விவசாயம், கால்நடைக்கு பயன்படுத்த முடியாமல் பாழாகியுள்ளது. ஏரியில் ஏலம் எடுப்பதில் இரு ரவுடிகளின் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி மோதல் உள்ளது. ஒரு தரப்பினர் ஏரியை ஏலம் எடுத்தவருக்கு மிரட்டல் விடுக்க, உயிரிழந்த கோழிகளை கொட்டி இருக்கலாம். இறந்த கோழிகள் மட்டும் கொட்டப்பட்டதா, கோழியில் விஷம் கலந்து கொட்டப்பட்டதா என்ற சந்தேகமும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒன்றிய கமிஷனர் திருவேரங்கன் கூறுகையில், ''ஏரியை ஏலம் எடுத்தவர், மீன்கள் வளர, உயிரிழந்த கோழிகளை கொட்டியதாக தெரிகிறது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
போலீசார் கூறுகையில், 'விசாரணைக்கு பின் தான் நடந்த விபரம் தெரியவரும்' என்றனர்.