/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் மூட்டை இருப்பு அதிகரிப்பு நாளை ஏலத்துக்கு சாலையோரம் காத்திருந்த விவசாயிகள்
/
கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் மூட்டை இருப்பு அதிகரிப்பு நாளை ஏலத்துக்கு சாலையோரம் காத்திருந்த விவசாயிகள்
கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் மூட்டை இருப்பு அதிகரிப்பு நாளை ஏலத்துக்கு சாலையோரம் காத்திருந்த விவசாயிகள்
கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் மூட்டை இருப்பு அதிகரிப்பு நாளை ஏலத்துக்கு சாலையோரம் காத்திருந்த விவசாயிகள்
ADDED : மே 07, 2025 02:01 AM
ஆத்துார்:வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் மூட்டை இருப்பு அதிகரிப்பால், நாளை நடக்க உள்ள ஏலத்துக்கு கொண்டு வந்த மஞ்சளை வைக்க முடியாமல், விவசாயிகள், சாலையோரம் வாகனங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்துார் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி, மஞ்சள் ஏலம் நடக்கிறது. அதற்கு ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல் பகுதிகள் மட்டுமின்றி பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார் மாவட்ட விவசாயிகளும், பருத்தி, மஞ்சளை கொண்டு வருகின்றனர்.
நாளை மஞ்சள் ஏலம் நடக்க உள்ளது. அதற்கு பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, அரியலுார் மாவட்ட விவசாயிகள், 100க்கும் மேற்பட்ட டிராக்டர், மினி சரக்கு வேன் உள்ளிட்ட வாகனங்களில், நேற்று காலை, 11:00 மணிக்கே கூட்டுறவு சங்கத்துக்கு வந்தனர். ஆனால் சங்க குடோன்களில், கடந்த மாதங்களில், 10 கோடி ரூபாய்க்கு மேலான, 25,000 மஞ்சள் மூட்டைகள் இருப்பு உள்ளது. இதனால், 'வேறு குடோன்களுக்கு மாற்றிய பின், விவசாயிகளின் மஞ்சள் மூட்டைகள் அனுமதிக்கப்படும்' என, கூட்டுறவு அலுவலர்கள் கூறினர்.
இதனால் விவசாயிகள், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆத்துார் - பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலைகளில், தலா, 1 கி.மீ.,க்கு மேல், மஞ்சள் எடுத்து வந்த, 50க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் காத்திருந்தனர். மதியம், 3:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியதால், மஞ்சள் மூட்டைகள் மீது தார்ப்பாய்களை போட்டு, விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சாலையோரம் நின்றிருந்த மஞ்சள் வாகனங்களால், அந்த வழியே இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். 4 மணி நேரத்துக்கு பின், மஞ்சள் மூட்டைகளுடன் வந்த வாகனங்களை, கூட்டுறவு சங்க அலுவலர்கள் அனுமதித்தனர்.
இதுகுறித்து அலுவலர்கள் கூறியதாவது:
ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்தில், 10 குடோன்கள் உள்ளன. அதில் மஞ்சளுக்கு, 9,000 டன் அளவில், 9 குடோன்கள் உள்ளன. கடந்த, 10 வாரங்களில், 25,000 மூட்டைகளுக்கு மேல் குடோன்களில் வியாபாரிகள் வைத்துள்ளனர். அவற்றை வியாபாரிகள், அவ்வப்போது எடுத்துச்செல்கின்றனர். மூட்டைகள் குறைவாக உள்ள குடோன்களில், இந்த வார ஏலத்துக்கு, இடம் தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒரே நேரத்தில் ஏராளமான வண்டிகளில், மஞ்சள் எடுத்து வந்ததால், இடம் தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மஞ்சள் மூட்டைகளை, குடோன்களில் வைக்கும் பணி நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.