/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடி திருவிழாவில் முதல்முறை மாரியம்மன் கோவிலில் இன்று தேரோட்ட விழா
/
ஆடி திருவிழாவில் முதல்முறை மாரியம்மன் கோவிலில் இன்று தேரோட்ட விழா
ஆடி திருவிழாவில் முதல்முறை மாரியம்மன் கோவிலில் இன்று தேரோட்ட விழா
ஆடி திருவிழாவில் முதல்முறை மாரியம்மன் கோவிலில் இன்று தேரோட்ட விழா
ADDED : ஆக 08, 2025 01:49 AM
சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை ஒட்டி, கடந்த, 3 நாட்களாக சக்தி அழைத்தல், அக்னி கரகம், பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நேற்றும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, வேண்டுதல் நிறைவேற்றி தந்த அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் உருளுதண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோவிலில் பல ஆண்டாகவே, அம்மன் வீதி உலாவுக்கு தேர் இல்லாமல் பல்லக்கில் கொண்டு சென்று வந்தனர். இதுகுறித்து நீண்ட நாளாக பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, திருத்தேர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அப்பணி முடிந்து, சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
இந்நிலையில் இன்று தேரோட்டம் நடக்கிறது. அதற்காக தேரை, நேற்று தொழிலாளர்கள் அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர் முழுதும் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் உற்சவ அம்மன் எழுந்தருள வேண்டி, பீடத்தில் பல்வேறு வாசனை மலர்கள் அலங்கரிக்கும் பணியும் நடந்தது. தேர் முழுமை பெற்று இன்று காலை, 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
இதை முன்னிட்டு தேர் செல்லும் இடங்கள் முழுதும் மின் கம்பிகள் அகற்றப்படுகின்றன. இதனால் மதியம் வரை, பழைய பஸ் ஸ்டாண்ட், முதல் அக்ரஹாரம், இரண்டாம் அக்ரஹாரம், சின்னக்கடை வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. மேலும் முதன் முதலில் நடக்கும் தேரோட்டம் என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.