/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
/
அணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
ADDED : டிச 04, 2024 01:59 AM
வாழப்பாடி, டிச. 4-
ஆனைமடுவு, கரியகோவில் அணைகளின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில், 67.25 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கும்படி ஆனைமடுவு அணை உள்ளது. ஆனால் நேற்றைய நிலவரப்படி, 65.35 அடி உயரத்தில் தண்ணீர் உள்ளது. அதில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அதிகபட்சமாக வினாடிக்கு 4,197 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. பின் படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று, 753 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெத்தநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்பட்டியில், 52.49 அடி உயரத்தில் கரியகோவில் அணை உள்ளது. அதில் நேற்று, 50.52 அடி உயரத்தில் தண்ணீர் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு வினாடிக்கு, 1,896 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக குறைந்து, நேற்று, 975 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை உதவி பொறியாளர் கோகுல்ராஜ் அறிக்கை:
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஆனைமடுவு, கரியகோவில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும்பட்சத்தில் அதற்கேற்ப, பாதுகாப்பு கருதி எந்த நேரமும் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படலாம். இரு அணைகளின் ஆற்று கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அவர்களின் உயிர், உடைமைகளின் பாதுகாப்புக்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள, துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.