/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒத்தையடி பாதையாக மாறிய தரைப்பாலம்: உயிரை பறித்தும் நகராட்சி அலட்சியம்
/
ஒத்தையடி பாதையாக மாறிய தரைப்பாலம்: உயிரை பறித்தும் நகராட்சி அலட்சியம்
ஒத்தையடி பாதையாக மாறிய தரைப்பாலம்: உயிரை பறித்தும் நகராட்சி அலட்சியம்
ஒத்தையடி பாதையாக மாறிய தரைப்பாலம்: உயிரை பறித்தும் நகராட்சி அலட்சியம்
ADDED : மே 24, 2024 07:09 AM
ஆத்துார் : தரைப்பாலம் உடைந்து ஒத்தையடி பாதையாக மாறிய நிலையில் அதில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அந்த பாலத்தை, தினமும் அச்சத்துடன் பாரதியார் தெரு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சி, 18வது வார்டு, பாரதியார் தெரு வழியே பைத்துாரில் இருந்து வசிஷ்ட நதிக்கு செல்லும் ஓடை செல்கிறது. அதன் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 10 ஆண்டுகளுக்கு முன் உடைந்து விழுந்தது. மற்றொரு பகுதி சேதம் அடைந்துள்ளது. பாரதியார் தெருவில் உள்ள, 3 ரேஷன் கடைகளுக்கு, 18, 30வது வார்டு மக்கள், அந்த பாலம் வழியே சென்றுதான் பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் சைக்கிள், பைக்கில் ரேஷன் பொருட்களை எடுத்து வரும்போது தடுமாறி விழுகின்றனர்.
சிலர் விழுந்து காயம் அடைந்துள்ளனர். அத்துடன் அங்குள்ள பொது கழிப்பிடத்தை பயன்படுத்த, பாலம் வழியே செல்கின்றனர். அதேபோல் மாணவ, மாணவியர், பாலத்தை கடந்து கிரைன்பஜார் பஸ் ஸ்டாப்புக்கு வந்துதான், பள்ளி, கல்லுாரிக்கு சென்று வருகின்றனர். பலர் பணிக்கும் செல்கின்றனர். நேற்று முன்தினம் அந்த பாலத்தின் வழியே சென்ற மதன், 18, என்பவர், ஓடை நீரில் விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
தி.மு.க.,வை சேர்ந்த, 18வது வார்டு கவுன்சிலர் கங்கையம்மாள் கூறுகையில், ''புதிதாக பாலம் கட்ட, நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா, அமைச்சர் நேருவிடம் மனு அளிக்கப்பட்டது. குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் கூறுகையில், ''உடைந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக கட்ட திட்டமதிப்பீடு தயாரித்து கடந்தாண்டு அறிக்கை அனுப்பினோம். அது தற்போதைய விலைவாசிக்கேற்ப இல்லாததால் புதுப்பிக்கப்பட்ட திட்ட அறிக்கை கேட்டுள்ளனர். அதை அனுப்பி நிதி பெற்றதும் பணி தொடங்கப்படும்,'' என்றார்.
பொது கழிப்பிடம், ரேஷன் கடைகள் உள்ளதால் தினமும் ஏராளமானோர் பாலத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் தரைப்பாலம் இடிந்த நிலையில் அந்த வழியே சைக்கிள், பைக்குகளில் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதேநேரம் ஆட்டோ கூட வரமுடியாத நிலை உள்ளது. முதியோர், அந்த வழியே நடக்கவே அச்சப்படுகின்றனர். மீண்டும் விபத்து ஏற்படாதபடி பாலம் கட்ட, கவுன்சிலர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.-- சாந்தி, ஆட்டோ டிரைவர், பாரதியார் தெரு.