ADDED : நவ 03, 2025 02:21 AM
சேலம்:கல்லறை திருநாளை ஒட்டி, சேலம், குழந்தை இயேசு பேராலயம் எதிரே உள்ள கல்லறை தோட்டத்தில், நேற்று ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர். அவர்கள், அவரவர் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, அவர்கள் ஆன்மா சாந்தி பெற பிரார்த்தனை செய்தனர். முன்னோர்களின் பிடித்த உணவு பொருட்களை படைத்தும், குடும்பத்துடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அதேபோல் நெத்திமேடு ஜெயராணி பள்ளி எதிரே உள்ள கல்லறை தோட்டம், மரவனேரி சி.எஸ்.ஐ., ஜான்சன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள், முன்னோர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
மேட்டூர் அடுத்த மாசிலாபாளையம் புனித ஜெபஸ்டியார் ஆலய பங்கு மக்கள், முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை வண்ணம் தீட்டி மலர்களால் அலங்கரித்தனர். ஜெபஸ்டியார் ஆலய பங்குதந்தை லுார்துசாமி தலைமையில் பலர், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைந்த சிறப்பு ஜெபம் செய்தனர்.
ஏற்காடு ஆர்.சி., தேவாலயத்தில் சிறப்பு திருப்பலியை தொடர்ந்து, கோவில் மேடு கல்லறை தோட்டத்தில் திருப்பலி நடந்தது. அப்போது முன்னோர்களின் கல்லறையில் மாலை போட்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

