/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலக்கடலை மகசூல் பாதிப்பு; நிவாரணம் வழங்கப்படுமா?
/
நிலக்கடலை மகசூல் பாதிப்பு; நிவாரணம் வழங்கப்படுமா?
ADDED : மே 23, 2024 07:23 AM
ஆத்துார் : ஆத்துார், தலைவாசல், சார்வாய்புதுார், சிறுவாச்சூர், மணிவிழுந்தான், காட்டுக்கோட்டை, புத்துார், ஊனத்துார், வீரகனுார், கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 200 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். கடந்த டிசம்பர், ஜனவரியில் பெய்த மழையை நம்பி, நிலக்கடலை விதைப்பு பணியில் ஈடுபட்டனர். அதற்கு பின் எதிர்பார்த்த மழை இல்லை. இதனால் செடியின் வேர்கள் நிலத்தில் ஆழமாக இறங்கவில்லை. கடலை பிஞ்சுகளுக்கு போதிய நீர் சத்து இல்லாமல் சிறுத்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மூன்று மாத பயிரான நிலக்கடலை விதைப்பின்போது மழையின்றி மகசூல் இல்லை. ஏக்கருக்கு, 20 முதல், 30 மூட்டை அளவு விளையும் நிலையில் வறட்சியால், 20 மூட்டை கூட கிடைக்காத நிலை உள்ளது. கடும் வெயில் தாக்கத்தில் செடிகள் காய்ந்தும், விளைந்த கடலைகள் மண்ணில் முளைத்தும் வந்தன. சில நாட்களாக பெய்து வரும் மழையில் ஈரப்பதம் அதிகளவில் ஏற்பட்டு, கடலை முளைத்து வருவதால் அறுவடை செய்து வருகிறோம். ஆனால் உரிய நேரத்தில் மழை பெய்யாததால், விளைந்துள்ள கடலை பாதிக்கும் மேல், தோலாகவும், பருப்பு சிறுத்தும், சொத்தையாகவும் காணப்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேளாண் அலுவலர்கள் கூறுகையில், 'ஒரு ெஹக்டேரில் நிலக்கடலை விதைப்பு செய்தால், 3 மாத அறுவடையின்போது, 2,000 முதல், 3,000 கிலோ(20 முதல், 30 மூட்டை) வரை மகசூல் கிடைக்கும். வறட்சியால் மகசூல் குறைந்துள்ளது' என்றனர்.

