/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புள்ளிநோய் தாக்குதல் அதிகரிப்பு: கறிவேப்பிலை விலை உயர்வு
/
புள்ளிநோய் தாக்குதல் அதிகரிப்பு: கறிவேப்பிலை விலை உயர்வு
புள்ளிநோய் தாக்குதல் அதிகரிப்பு: கறிவேப்பிலை விலை உயர்வு
புள்ளிநோய் தாக்குதல் அதிகரிப்பு: கறிவேப்பிலை விலை உயர்வு
ADDED : டிச 22, 2024 12:55 AM
ஆத்துார்,ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில், 1,000 ஏக்கருக்கு மேல் கறிவேப்பிலை செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பரில் விளைச்சல் கணிசமாக இருந்ததால், கிலோ, 10 முதல், 20 ரூபாய் வரை விற்றது. நவம்பர் முதல், தற்போது வரை பருவ மழை பெய்து வருவதால் கறிவேப்பிலை துளிர் விட்டாலும், சில பகுதிகளில் புள்ளி நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. நுனி செடியில் பூச்சி தாக்கம் உள்ளதால் வளர்ச்சி குறைந்து, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர மழைக்கு பின், கடும் பனிப்பொழிவு உள்ளதால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால், கறிவேப்பிலை கிலோ, 50 முதல், 60 ரூபாய் வரை, விவசாய தோட்டத்தில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
அதேநேரம் தலைவாசல் மார்க்கெட், உழவர் சந்தை, வெளி மார்க்கெட்டுகளில், கிலோ, 80 ரூபாய்க்கு, வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆத்துார், தெற்குகாடு விவசாயி மாதேஸ்வரன் கூறியதாவது: ஆத்துார், தலைவாசல் பகுதிகளில் விளைவிக்கப்படும் கறிவேப்பிலை, ருசி, வாசனை மிகுந்துள்ளதால் நல்ல வரவேற்பு உள்ளது. ஏக்கருக்கு, 5 டன் விளைச்சல் இருக்கும். பருவ மழைக்கு பின் பனிப்பொழிவு, புள்ளி நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏக்கருக்கு, 2 டன் வரை மட்டும் மகசூல் உள்ளது. மருந்து, பராமரிப்பு மூலம், புள்ளி நோயை கட்டுப்படுத்தி வருகிறோம். தற்போது கிலோ, 50 முதல், 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சராசரியாக கிலோ, 40 ரூபாய்க்கு விற்றால் தான், விவசாயிகளுக்கு பாதிப்பின்றி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.சேலம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மஞ்சுளா கூறுகையில், ''பாதிப்பு செடிகள் கண்டறிந்து நிவாரணம் வழங்கப்படும்,'' என்றார்.