/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூத்தையன், மாரியம்மன் தேர் திருவிழா கோலாகலம்
/
கூத்தையன், மாரியம்மன் தேர் திருவிழா கோலாகலம்
ADDED : மே 29, 2025 01:31 AM
பெத்தநாயக்கன்பாளையம் பெத்தநாயக்கன்பாளையம் டவுன் பஞ்சாயத்து தொழுவ தெருவில் உள்ள காளியம்மன், பெரிய மாரியம்மன், கூத்தையன் சுவாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 13ல் கூத்தாண்டவர் குடி அழைத்தல், பூ போடுதல், மகாபாரத சொற்பொழிவு நடந்தது. 20ல் காளியம்மன், பெரிய மாரியம்மன் குடி அழைத்தல், காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.'
நேற்று காலை ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர், அலகு குத்தினர். மாலை, கூத்தையன், பெரிய மாரியம்மன் தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து, தொழுவ பள்ளி, அக்ரஹாரம், கடைவீதி தெருக்கள் வழியே இழுத்துச்சென்று கோவிலை அடைந்தனர். இன்று காளியம்மன் பெரிய தேர் திருவீதி உலா நடக்கிறது.
தீ மிதி விழா
வாழப்பாடி, குறிச்சி வடபத்ரகாளியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக திரளான பக்தர்கள் மேள தாளத்துடன் வசிஷ்ட நதியில் குளித்து, மஞ்சள் நீரை மேலே தெளித்து, மாலை அணிந்தபடி வந்து, கோவில் முன் அமைக்கப்பட்ட, தீக்குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து ஆடு, கோழி பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
அலகு குத்தி நேர்த்திக்கடன்
ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில், கடந்த, 22ல் சக்தி அழைத்தலுடன் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று அலகு குத்தும் விழா நடந்தது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், அலகு குத்தியும், தீச்சட்டி, பூங்கரகம் எடுத்தும் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர்.
அதேபோல் தலைவாசல் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம் பால் குட ஊர்வலம் நடந்தது. நேற்று மதியம், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச்சென்று கோவிலை அடைந்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
ஆத்துார், தெற்கு உடையார்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா பூஜை நடந்தது. அதில் அம்மனுக்கு அபிேஷக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.