ADDED : ஜூலை 09, 2025 02:07 AM
ஆத்துார், தலைவாசல், வேப்பம்பூண்டி, அண்ணா நகரை சேர்ந்த காசிதுரை மகன் அஜய்குமார், 19. திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., 2ம் ஆண்டு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த, பழனிவேல் மகள் யோகேஸ்வரி, 19. இவர், டி.எம்.எல்.டி., படித்துள்ளார். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இருவரும் காதலித்த நிலையில், நேற்று வீட்டை விட்டு வெளியேறி, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.
மருத்துவமனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், சிறுவத்துாரை சேர்ந்தவர் சிபிராஜ், 22. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்தவர் தெய்வானைசெல்வி, 21. பட்டதாரியான இவர்கள், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தபோது காதலித்தனர். வெவ்வேறு சமுதாயத்தினரான இவர்கள், கடந்த ஜூன், 21ல், திருமணம் செய்து கொண்ட நிலையில், நேற்று ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.
ஆத்துார், துலுக்கனுார், ஆணைக்கல்மேட்டை சேர்ந்தவர் ராஜேஷ், 24. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், கோவிலுாரை சேர்ந்தவர் மீனாட்சி, 24. இவர்கள் கல்லுாரியில் படித்தபோது பழகிய நிலையில், நேற்று திருமணம் செய்து கொண்டு ஆத்துார் டவுன் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார், மூன்று ஜோடிகளையும் பேச்சு நடத்தி அனுப்பிவைத்தனர்.]]