ADDED : ஜன 16, 2024 10:02 AM
கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு
சேலம் அம்மாபேட்டை, பெரியார் தெருவை சேர்ந்தவர் பரமசிவம், 30, கூலி தொழிலாளி. இவர் தன் தந்தையின் சிம்கார்டை பயன்படுத்தி வந்துள்ளார். அவரது சகோதரர் அதை நீண்டநாளாக கேட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம், அதை கொடுத்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பரமசிவத்தின் தந்தை சுப்ரமணிக்கு சொந்தமான விவசாய கிணற்றில், சடலமாக மீட்கப்பட்டார். அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவரது மர்மசாவு குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கலை முன்னிட்டு
ஆடு விற்பனை ஜோர்
வாழப்பாடி அடுத்த பேளூர் வாரச்சந்தையில், 1 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்தது.
வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியில் நேற்று, ஆடு விற்பனை சந்தை கூடியது. சேலம், வெள்ளிமலை, கருமந்துறை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
நேற்று, 1,300 ஆடுகள் வரை விற்பனைக்கு வந்தது. 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு, 4,000 முதல், 6,000 ரூபாய் வரை விலை போனது. 10 கிலோ எடை கொண்ட பெண் ஆடு, 4,000 முதல் 5,000 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற சந்தையில், 1 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கிணற்றில் மூழ்கிய
வாலிபர் உடல் மீட்பு
காடையாம்பட்டி அருகே, பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் சிவா, 22. கூலி தொழிலாளி. திருமணமாகவில்லை. இவர் நேற்று மதியம், 3:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள மகேந்திரன் என்பவரது விவசாய கிணற்றில், நண்பர்களுடன் குளித்துள்ளார். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் தேடி சிவாவின் உடலை சடலமாக மீட்டனர்.
தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விலை உயர்ந்த பைக் திருட்டு
சேலம் சூரமங்கலம், காசக்காரனுார் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், 24, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 27ல், இவருக்கு சொந்தமான யமஹா ஆர்.15 என்ற பைக்கை இரவில் வீட்டின் முன் நிறுத்திவிட்டு துாங்கியுள்ளார். காலையில் பார்த்த போது, ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள பைக்கின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மல்லுார் வராத பஸ் டிரைவர்
கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை
சேலம்-நாமக்கல் நான்கு வழிச்சாலையில் இயக்கப்படும் அரசு, தனியார் புறநகர் பஸ்கள், மல்லுார் ஊருக்குள் வராமல், புறவழிச்சாலையில் செல்வதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நேற்று மாலை, 4:00 மணிக்கு ராசிபுரத்திலிருந்து தனியார் பஸ்சில் மல்லுார் பயணிகள் ஏறினர். மல்லுார் ஊருக்குள் செல்லாது என, பயணிகளை புறவழிச்சாலையில் வலுக்கட்டாயமாக இறக்கி விட்டனர். மாலை, 5:00 மணிக்கு மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் தலைமையில் ஏராளமானோர் நாமக்கல் புறவழிச்சாலையில் குவிந்தனர்.
ராசிபுரம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்த தனியார் பஸ்களை மறித்து, மல்லுார் வழியாக செல்ல வேண்டும் என, டிரைவர், கண்டக்டரை எச்சரிக்கை செய்தனர். அதன் பின், பஸ்கள் மல்லுார் வழியாக இயக்கப்பட்டன.
டார்லிங்கின் பொங்கல் படி சலுகை
பொங்கல் தமிழகத்தின் தலைச்சிறந்த பண்டிகை என்பதற்கு, மற்றுமொரு சிறந்த சான்று அனைவரும் எந்தவித பேதமும் இன்றி ஒன்று கூடுதல். மேலும் பொங்கல் என்றால் நினைவுக்கு வருவது பொங்கல் அன்று நம் தாத்தா பாட்டி, தாய், தந்தை மற்றும் முதலாளியிடம் இருந்து கிடைக்கும் பொங்கல் படி. அதே போல் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று கூடி எந்த பேதமும் இன்றி ஆதரித்து, தமிழகத்தின் முன்னணி வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையாளராக டார்லிங் வளர்ந்துள்ளது.
இந்த பொங்கலை மேலும் சிறப்பாக்கி வருகிறது டார்லிங்-ன் பொங்கல் படி. எப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பு பரிசு ஒவ்வொரு விற்பனைக்கும் வழங்கப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் வாங்கினால் ஆப்பிள் ஏர் பட்ஸ் இலவசம். எல்ஜி 70 இன்ச் 'டிவி' வாங்கினால், 19,990 மதிப்புள்ள ரிக்லினைர் இலவசம், கூடுதலாக 7,000 வரை உங்கள் பழைய ஸ்மார்ட் டிவிக்கு எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியும் உள்ளது. கிட்சன் சிம்னி-களுக்கு பிரத்யேகமாக, 60 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் டார்லிங்-கில் சிம்னி வாங்கும் பட்சத்தில், ரூ.9,999 மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச், டி.டபிள்யூ.எஸ்., ஏர் பட்ஸ் மற்றும் புளூடூத் ஸ்பீக்கர், 499 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொங்கல் சிறப்பு விற்பனையில் பர்னிச்சர்களுக்கு, 25 சதவீதம் வரை கேஷ்பேக் கூப்பன், மொபைல் போன்களுக்கு, 10,000 வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி என்று எக்கச்சக்கமாக தள்ளுபடிகள் காத்திருக்கிறது. இவை அனைத்தும்
ஜனவரி, 18 வரை மட்டுமே.
அன்னபூர்ணா கல்லுாரியில்
பொங்கல் விழா கோலாகலம்
சேலம், அன்னபூர்ணா பொறியியல் கல்லுாரியில், முதல்வர் அன்புச்செழியன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி நுழைவு வாயிலில் இருந்து வளாகம் முழுவதும் தோரணங்கள், வண்ணக்கோலங்கள் போடப்பட்டிருந்தன. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, சேலை அணிந்து வந்து ஒன்று கூடி பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவித்து வழிபட்டனர்.
நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் நடனமாடியும், தொடர்ந்து சிலம்பாட்டம், பானை உடைத்தல், இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ரோட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் அருள்முகம், தமிழ் இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெய்குமார் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். கல்லுாரி தமிழ் உதவி பேராசிரியர் ஜெய்குமார் நன்றி கூறினார்.
புனித வனத்து
சின்னப்பர்
தேர் திருவிழா
புனித வனத்து சின்னப்பர் தேரோட்டம் நேற்று நடந்தது.
ஓமலுார் ஆர்.சி.,செட்டிப்பட்டியில் உள்ள, புனித வனத்து சின்னப்பர் ஆலய தேர் திருவிழா கொடியேற்றம் கடந்த, 13ல், குமாரபாளையம் பங்குதந்தை பிலேவேந்திரம் தலைமையில் நடந்தது. நேற்று முன்தினம், மைசூர் வேந்தர் ஜோசப் பாக்கியராஜ் தலைமையில் நவநாள் திருப்பலி நடந்தது.
நேற்று சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில், திருவிழா திருப்பலி நடந்தது. மதியம் அன்னதானம் துவங்கியது. மாலை, 5:15 மணிக்கு வேண்டும் தேர் பவனி, அலங்கார தேர்பவனி ஆர்.சி.,செட்டிப்பட்டி பங்கு தந்தை ஜோசப்பவுல்ராஜ் தலைமையில் துவங்கியது. ஏராளமான கிறிஸ்தவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
சேலம் மத்திய சிறையில்
பொங்கல் விழா போட்டி
சேலம் மத்திய பெண்கள் கிளை சிறையில், பொங்கல் தின விளையாட்டு போட்டி நேற்று நடந்தது.
சிறை எஸ்.பி., வினோத்குமார் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்தார். ஆண் சிறைவாசிகளுக்கு செஸ், கேரம்போர்டு, பூப்பந்து, வாலிபால், கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் பாட்டு போட்டிகள் நடந்தன. பெண் சிறைவாசிகளுக்கு, கோல போட்டி, லெமன் ஸ்பூன், பாட்டு போட்டி, பலுான் உடைத்தல், இசை நாற்காலி போட்டிகள் நடந்தன. போட்டிகளில் ஆண் சிறைவாசிகள், 85 பேர், பெண் சிறைவாசிகள், 15 பேர் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு, பக்கெட், ஹாட்பாக்ஸ், தண்ணீர் சேமிப்பு கலன் ஆகியன பரிசாக வழங்கப்பட்டது.
பெண்கள் சிறை கண்காணிப்பாளர் கீதா, துணை சிறை அலுவலர்கள் செல்வி, அன்பழகன், கோவிந்தசாமி, உதவி சிறை அலுவலர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உழவர்சந்தை விலை பட்டியல் குளறுபடி தடுக்க வலியுறுத்தல்
சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 உழவர்சந்தைகளில், தாதகாப்பட்டி, இளம்பிள்ளை என, இரு சந்தைகளில் நேற்று முன்தினம் தக்காளி கிலோ, 25 ரூபாய், மற்ற சந்தைகளில், 22 ரூபாய்க்கு விற்பனையானது.
முறைகேடு காரணமாக, விற்பனை விலையில் மாற்றம் தென்பட்டதாக, நமது நாளிதழில் செய்தி வெளியானது. வியாபாரிகளுடன் கைகோர்த்து கொண்டு, வேளாண் அதிகாரிகள் சிலர் ஆறு மாதத்துக்கும் மேலாக, இத்தகைய முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் வலியுறுத்தினர்.
அதன் எதிரொலியாக, நேற்று எல்லா உழவர்சந்தைகளிலும் தரமான தக்காளி கிலோ, 24 ரூபாய் விலையில், 39 டன் ஒரே சீராக விற்பனை நடந்தது. அதேபோல, ஆங்கில காய்கறி விற்பனையிலும் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
தகவல் பலகையில் தெரிவிக்கும் விலை பட்டியலுக்கும், விற்பனை விலைக்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதை, சரி செய்ய வேண்டும். அத்துடன், முத்திரையிடாத தராசுகள் பயன்படுத்துவதை கண்டறிந்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடைப்பாடியில் தி.மு.க.,வினர்
பொங்கல் கொண்டாட்டம்
இடைப்பாடியில் நகர, தி.மு.க., சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., இடைப்பாடி நகர தி.மு.க., சார்பில் பொங்கல் விழா இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் நடந்தது. நகர செயலரும், நகராட்சி தலைவருமான பாஷா தலைமை வகித்தார். சேலம் மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலர் செல்வகணபதி, புதுப்பானையில் பொங்கல் வைத்தார். பின் பொங்கல், கரும்புகளை மக்களுக்கு வழங்கியதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், இடைப்பாடி ஒன்றிய செயலர் நல்லதம்பி, பேரூராட்சி தலைவர்கள் அழகுதுரை (பூலாம்பட்டி), சுந்தரம் (கொங்கணாபுரம்), நகர அவைத்தலைவர் மாதையன், துணை செயலர் வடிவேல், நகர பொருளாளர் ராஜமாணிக்கம், தொ.மு.ச., அமைப்பு செயலர் பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சாந்தி, கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.