sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்


ADDED : ஜன 29, 2024 10:54 AM

Google News

ADDED : ஜன 29, 2024 10:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லால் தாக்கி விவசாயி கொலை

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பி.கண்ணுக்காரனுாரை சேர்ந்த விவசாயிகள் ராஜா, 59, ஈஸ்வரன், 48; இவர்களிடையே நில பிரச்னையால், நேற்று மாலை, 4:30 மணிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன், கல்லை எடுத்து ராஜா மீது வீசியுள்ளார். அவரது நெற்றிப்பொறியில் பட தடுமாறி விழுந்தார். ராஜாவை உறவினர்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜா இறந்துவிட்டது தெரிந்தது. வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஈஸ்வரனை தேடுகின்றனர்.

உயிரிழந்த ராஜாவுக்கு மனைவி மாதம்மாள், மணமான இரு மகன்கள் உள்ளனர்.

முகூர்த்தக்கால் நடல்

தாசநாயக்கன்பட்டி சக்தி காளியம்மன் திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிறப்பு பூஜை செய்து மூங்கில் மரத்தில் முகூர்த்தக்கால் போடப்பட்டது. நாளை விக்னேஷ்வரர் பூஜை, வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை, அம்மனுக்கு பூச்சாட்டுதல் நடக்க உள்ளது. வரும், 2ல் திருவிளக்கு பூஜை, 4ல் பால்குட ஊர்வலம், 7ல் சக்தி அழைத்தல், கரகம், பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், திருவீதி உலா, 8ல் மஞ்சள் நீராட்டு விழா, 11ல் மதுரை வீரன் பொங்கல் விழா நடக்க உள்ளது.

எச்.ஐ.வி., நம்பிக்கை

மையங்களை மூட எதிர்ப்பு

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர் நலச்சங்கம் சார்பில், 'மக்களின் உயிர்காக்கும் எய்ட்ஸ் தடுப்பு சட்டத்தை முடக்கும் மத்திய அரசின் மறுசீரமைப்பு' பெயரில் கருத்தரங்கம் சேலத்தில் நேற்று நடந்தது. தனியார் மய கொள்கையை கைவிட வலியுறுத்தி நடந்த கருத்தரங்குக்கு, மாநில தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெகஜோதி வரவேற்றார்.

மாநில பொதுச்செயலர் சேரலாதன் பேசுகையில், ''உலக சுகாதார நிறுவனம் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஆலோசனை மையங்களையும், பரிசோதனை கூடங்களையும் அதிகரிக்க வழிகாட்டியுள்ள சூழலில் மத்திய அரசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. அதனால் தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்படும். மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொய்வும், நோயாளிகளுக்கு ஆலோசனை, உதவிகள் கூட தடைபடும்,'' என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் செயல்படும், 377 எச்.ஐ.வி., ஆலோசனை, பரிசோதனை நம்பிக்கை மையங்களில், 186ஐ மூட, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையை திரும்பப்பெற, எச்.ஐ.வி., தொற்றுள்ளோர், குடும்பத்தினர், மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து மனு அளிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தள்ளுமுள்ளுவால்

பிரியாணி கடை மூடல்

ஆத்துார், மாரிமுத்து சாலையை சேர்ந்தவர் மணி, 34. அங்குள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் நேற்று பிரியாணி கடை திறந்தார். இதற்கான திறப்பு விழா துண்டு பிரசுரத்தில், '10 ரூபாய் நாணயம்' கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. காலை, 11:00 மணிக்கு கடையை திறந்தபோது ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பிரியாணி வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த ஆத்துார் டவுன் போலீசார், மதியம், 12:00 மணிக்கு கடையை மூடினர். அதன் உரிமையாளர், '10 ரூபாய் பிரியாணி தீர்ந்துவிட்டது' என, அறிவிப்பு பலகை வைக்க, அனைவரும் கலைந்து சென்றனர்.

தந்தைக்கு திதி கொடுக்க

சென்ற மகன் விபத்தில் பலி

சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் சீனிவாச ராகவன், 29. இவர், சேலத்தில் உள்ள தனியார் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவரது தந்தை சீனிவாசன், ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து, அவருக்கு திதி கொடுக்க, சீனிவாச ராகவன் தனது, 'ஹோண்டா டியூட்' மொபட்டில், நேற்று காலை, 7:00 மணிக்கு, சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

நாமக்கல் அருகே, பொம்மைகுட்டைமேடு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சீனிவாச ராகவன் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பால் கொள்முதல் மையத்தை

முற்றுகையிட்ட உற்பத்தியாளர்

கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியில், தனியார் பால் நிறுவனத்தில் கொள்முதல், பால் குளிரூட்டும் மையம் உள்ளது. அங்கு பால் ஊற்றும் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை தீவனம், கால்சியம் டானிக் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.

கடந்த மாதம் வழங்கிய தீவனத்தை கால்நடைகளுக்கு வழங்கியபோது, கழிச்சல், வயிறு கோளாறு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. அந்த தீவனங்களை, உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் மையத்தில் திரும்ப வழங்கினர். ஆனால் அந்நிறுவனம் இதுதொடர்பாக நடவடிக்கை எதுவும் இல்லை என, 100க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள், நேற்று மதியம், தனியார் பால் கொள்முதல் மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி போலீசார் பேச்சு நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'தனியார் பால் கொள்முதல் மையத்தில் வழங்கிய தீவனத்தில் கல், மண் இருந்தன. இதை உட்கொண்ட, 70க்கும் மேற்பட்ட கறவை மாடுகளுக்கு, உடல் உபாதைகள் ஏற்பட்டன. தவிர பால் உற்பத்தியும் குறைந்துவிட்டது. தீவனத்தால் பாதிக்கப்பட்ட கறவை மாடுகளுக்கு தனியார் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்' என்றனர்.

சிறுமியை பலாத்காரப்படுத்தி

வீடியோவை தாய்க்கு

அனுப்பிய சிறுவன் கைது

சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவனும், சிறுமியும் காதலித்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சிறுமியை அவரது பெற்றோர், திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பினர். இதை அறிந்த சிறுவன், அங்கு சென்று சிறுமியை வெளியே அழைத்துச்சென்றதோடு, பலாத்காரம் செய்துள்ளார். அதை வீடியோவாக எடுத்து, சிறுமியின் தாய்க்கு, 'வாட்ஸாப்'பில் அனுப்பியுள்ளார். மேலும், 'நீங்கள் தடுத்ததால் பாலியல் பலாத்காரம் செய்தேன். இப்போது அவளை யாருக்கு திருமணம் செய்து கொடுப்பீர்கள், அவளை யார் கட்டிக்கொள்வார்' என குறுந்தகவலை அனுப்பியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், வீடியோ காட்சிகளுடன் அளித்த புகார்படி, டவுன் மகளிர் போலீசார், சிறுவனை நேற்று கைது செய்தனர்.

புனித மரியன்னை பள்ளியில்

ஆண்டு விழா கொண்டாட்டம்

அ.நா.மங்கலம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில், 61ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் சகாயராஜ் தலைமை வகித்தார்.

தமிழக பாடநுால், கல்வியியல் பணி கழக உறுப்பினர் செயலர் குப்புசாமி, ஓவிய ஆசிரியர் தார்சியூஸ் ஜெகராஜ் பங்கேற்றனர். இதில் கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும், தேசிய அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

540 கிலோ இரும்பு சட்டம்

திருடிய 4 பேருக்கு 'காப்பு'

சேலம், அணைமேட்டில் ரயில்வே மேம்பால கட்டுமானப்பணி நடக்கிறது. அதற்கான இரும்பு சட்டங்கள், அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அங்கு நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு வந்த, 4 பேர், 10 இரும்பு சட்டங்களை திருடி, 'ரிக்ஷா'வில் ஏற்றினர். இதை பார்த்து காவலாளிகள் மயில்சாமி, ரகுபதி தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து கட்டுமான மேற்பார்வை பொறியாளர் ஸ்ரீதரன் தகவல்படி, அங்கு வந்த அஸ்தம்பட்டி போலீசார், 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில், சேலம், சத்திரத்தை சேர்ந்த நந்தகோபால், 25, பொன்னம்மாபேட்டை அருண்குமார், 28, ரத்தினசாமிபுரம் சதீஷ்குமார், 32, ஜெயராமன், 46, என தெரிந்தது. அவர்கள் திருடிய, 540 கிலோ இரும்பு சட்டங்களை கைப்பற்றி, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதன் மதிப்பு, 25,000 ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.

3 நாட்கள் பயிற்சியால்

பயனடைந்த விவசாயிகள்

'அட்மா' திட்டத்தில் நிலத்தடி நீர் பாசன மேலாண்மை, பயன் குறித்து, மாநில அளவில், 3 நாள் பயிற்சிக்கு, பனமரத்துப்பட்டி விவசாயிகளை, அதன் உதவி இயக்குனர் வேலு, கடந்த, 22ல் பஸ் மூலம் அனுப்பி வைத்தார். அவர்கள் கோவை, ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் மழைநீரை சேமித்து, நவீன பாசன முறைகளை கடைப்பிடித்தல்; நிலப்போர்வை பயன்படுத்தி மண்ணிலிருந்து நீர் ஆவியாவதை குறைத்தல்; கசிவு நீர்குட்டை, கிராம குளம், தடுப்பணை, பண்ணை குட்டை, சம உயர கல்வரப்பு அமைத்தல், சொட்டு நீர் பாசன கருவி பராமரித்தல் குறித்தும் பயிற்சி பெற்றனர்.

தொடர்ந்து திருப்பூர், உடுமலைப்பேட்டையில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகள் பயிற்சி பெற்றனர். பனமரத்துப்பட்டி வட்டார அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, உதவி தொழில்நுட்ப மேலாளர் தாழ்குழலி ஆகியோர் உடனிருந்தனர்.

ரேஷன் கடை திறப்பு

வீராணம் அருகே வீமனுாரில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சி தலைவி செல்வராணி தலைமை வகித்தார். அதில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய குழு துணைத்தலைவர் புவனேஸ்வரி, ரேஷன் கடை கட்டடத்தை, மக்கள் பயன்பாட்டுகு திறந்து வைத்தார். தி.மு.க.,வின் ஒன்றிய செயலர்கள் விஜயகுமார், ரத்தினவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

மருந்துக்கு ஜி.எஸ்.டி., வரியை

முழுமையாக நீக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க ஆண்டு பேரவை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. சேலம் கிளை தலைவர் செந்தில் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலர் திலீப்மேனன் கொடியேற்றினார். கிளை பொருளாளர் பொன்மன செல்வன் ஆண்டறிக்கை வாசித்தார். மாநில செயலர் வினோத்

ராமானுஜர் பேசினார்.

அதில் மருந்து நிறுவனங்களின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்தும், மருந்து பொருட்கள் மீதான, ஜி.எஸ்.டி., வரியை முழுமையாக நீக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மற்றொரு மாநில செயலர் பிரதீப், மாநில செயற்குழு உறுப்பினர் சவுந்திரராமன், துணை செயலர் பாலமுருகன், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us