/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவிளக்கு எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
/
மாவிளக்கு எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
ADDED : பிப் 09, 2024 10:16 AM
வீரபாண்டி: இரும்பாலை அருகே கீரைபாப்பம்பாடி பாப்பார மாரியம்மன் கோவிலில் பல்லி வாக்கு எனும் சகுனம் பார்த்து திருவிழா நடத்தப்படும். கடந்த வாரம் பல்லி வாக்கு கிடைத்ததால் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 6ல் சத்தாபரண ஊர்வலம், நேற்று முன்தினம் கஞ்சி கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தன. நேற்று பொங்கல் வைத்தல் நடந்தது.
முன்னதாக பாப்பார மாரியம்மன் கோவிலில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், மாவிளக்கு தட்டுகளை தலையில் சுமந்து ஓலைப்பட்டி அம்மன் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து வழிபட்டு, 'சக்தி'யை அழைத்துக்கொண்டு பாப்பார மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதில் வேறு எங்கும் இல்லாதபடி மாவிளக்கு ஊர்வலத்தில் மாவு எடுத்து வரும் தட்டுகளுக்கு, ஆளுயர வண்ண காகித குடைகளால் அலங்கரித்து பக்தர்கள் எடுத்து வந்தது, பார்ப்பவர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
தொடர்ந்து அலகு குத்துதல், சேத்து முட்டி, பூங்கரகம், பாலி கொண்டு வருதல், மாரியம்மன் கடகம்பனுக்கு
மாவிளக்கு எடுத்து வருதல், புதுார் கஞ்சி ஊற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு அக்னி கரகம், வண்டி வேடிக்கை
நடந்தது.
இன்று சர்வ அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. இத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறும்.

