/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டியரை கொன்று நகை கொள்ளை: கொடூரனை சுட்டுப்பிடித்தது போலீஸ்
/
மூதாட்டியரை கொன்று நகை கொள்ளை: கொடூரனை சுட்டுப்பிடித்தது போலீஸ்
மூதாட்டியரை கொன்று நகை கொள்ளை: கொடூரனை சுட்டுப்பிடித்தது போலீஸ்
மூதாட்டியரை கொன்று நகை கொள்ளை: கொடூரனை சுட்டுப்பிடித்தது போலீஸ்
ADDED : நவ 08, 2025 12:00 AM

சங்ககிரி: இரு மூதாட்டியரை கொன்று, நகைகளை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி சுட்டு பிடிக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை அருகே, இ.காட்டூரை சேர்ந்த மாரிமுத்து மனைவி பாவாயி, 70. இவர், நவ., 3ல் ஆடு மேய்க்க சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. அதே நாளில், அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மனைவி பெரியம்மாள், 75, என்பவரும் காணாமல் போனார்.
மகுடஞ்சாவடி போலீசார் இருவரையும் தேடினர். மறுநாள், பாவாயிக்கு சொந்தமான குட்டையில், இரு மூதாட்டியரும் சடலமாக மிதந்தனர். சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தபோது, அவர்கள் அணிந்திருந்த தங்க தோடுகள், வெள்ளி கால் சங்கிலிகள் மாயமாகி இருந்தன.
அதேநேரம், குட்டை, அதை ஒட்டிய, 3 ஏக்கர் விவசாய நிலத்தை, பாவாயி குடும்பத்தினரிடம் இருந்து, குத்தகைக்கு விவசாயம் செய்து வந்த, ஓமலுார் அருகே காமலாபுரம், கிழக்கத்திகாட்டை சேர்ந்த அய்யனார், 55, தலைமறைவானது தெரிந்தது.
அவர் மீது சந்தேகம் எழவே, அவரை பிடிக்க, சேலம் ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நேற்று அதிகாலை, சங்ககிரி அருகே ஒருக்காமலை அடிவாரத்தில் பதுங்கியிருந்த அய்யனாரை பிடிக்க போலீசார் சென்றனர்.
அவர் தப்ப முயன்று, மகுடஞ்சாவடி எஸ்.ஐ., கண்ணனின், வலது தோள்பட்டையில் கத்தியால் வெட்டினார். இதனால் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரது கைத்துப்பாக்கியால், அய்யனாரின் வலது முட்டிக்காலில் சுட்டார்.
காயமடைந்த கண்ணன், அய்யனார், சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அய்யனார், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இதற்கு முன், ஓமலுார், கட்டிக்காரனுாரை சேர்ந்தவர் நரேஷ்குமார், 32, மூதாட்டி காதுகளில் உள்ள தோடுகளை பறித்த வழக்கில் மே, 24ல், சங்ககிரி மலை அடிவார பகுதியில், வலது முட்டிக்காலில் துப்பாக்கியால் சுட்டு, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அய்யனார் கொலை செய்ய உதவிய, இடங்கணசாலை, இ.காட்டூர் டிராக்டர் டிரைவர் பூபதி, 53, என்பவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.

