/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்தூருடன் சேர்க்க எதிர்ப்பு: ஏற்காட்டில் இன்று கடையடைப்பு
/
ஆத்தூருடன் சேர்க்க எதிர்ப்பு: ஏற்காட்டில் இன்று கடையடைப்பு
ஆத்தூருடன் சேர்க்க எதிர்ப்பு: ஏற்காட்டில் இன்று கடையடைப்பு
ஆத்தூருடன் சேர்க்க எதிர்ப்பு: ஏற்காட்டில் இன்று கடையடைப்பு
ADDED : ஜன 26, 2024 10:04 AM
ஏற்காடு: ஏற்காட்டை புதிதாக உருவாகும் ஆத்துார் மாவட்டத்தில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, ஏற்காடு முழுதும் இன்று கடை அடைப்பு நடக்கிறது.
சேலத்தை இரண்டாக பிரித்து, ஆத்துாரை புது மாவட்டமாக உருவாக்க உள்ளதாகவும், அதில் ஏற்காட்டை இணைக்க உள்ளதாகவும், வாட்ஸாப் உள்ளிட்டவற்றில் தகவல் பரவியது. அப்படி மாற்றப்பட்டால், கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல, அங்குள்ள மலைக்கிராம மக்கள், 120 கி.மீ., கடந்து ஆத்துார் செல்ல வேண்டும் என, மக்கள் இடையே அச்சம் எழுந்தது.
இதனால் அங்குள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள், அனைத்து இயக்க தலைவர்கள், மகளிர், இளைஞர் அமைப்பினர் உள்ளிட்ட மக்கள் இணைந்து, ஏற்காடு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரவிச்சந்திரனிடம் நேற்று முன்தினம் மனு அளித்தனர். தொடர்ந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் ஏற்காட்டை ஆத்துாருடன் சேர்ப்பதன் மூலம், 67 கிராம மக்கள் சிரமத்துக்கு ஆளாவர். அதனால் ஏற்காட்டை சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரி இருந்தனர். தொடர்ந்து ஏற்காட்டில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட மக்கள் இணைந்து அங்குள்ள தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் ஏற்காட்டை புதிதாக உருவாக்கப்படும் ஆத்துார் மாவட்டத்தில் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கும்படி, ஏற்காடு முழுதும் ஜன., 26ல்(இன்று) மட்டும் கடை அடைப்பு நடத்த முடிவு செய்தனர். இதற்கு வணிக சங்கங்களும் ஆதரவு தெரிவித்து கடை அடைப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் அனைவரும், 'தமிழக அரசே ஏற்காடு தாலுகாவை சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்காதே' என எழுதப்பட்ட வாசகங்களை கையில் வைத்துக்கொண்டு, ஏற்காட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆதரவு கேட்டு ஊர்வலமாக சென்றனர்.

