ADDED : ஜூன் 09, 2024 04:14 AM
தங்கம் பவுனுக்கு ரூ.1,520 சரிவு
சேலம்-
சர்வதேச நிலவரத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தங்கத்தின் விலை சரிவடைந்து விற்பனையானது.
நேற்று முன்தினம் தங்கம் கிராம், 6,760, பவுன், 54,080 ரூபாய், வெள்ளி கிராம், 99.50, பார் வெள்ளி, 99,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் கிராமிற்கு, 190 குறைந்து, 6,570 ரூபாய், பவுனுக்கு, 1,520 ரூபாய் குறைந்து, 52,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமிற்கு, ரூ.4.50 குறைந்து, ரூ.95, பார் வெள்ளி, 4,500 ரூபாய் குறைந்து, 95,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மழையின்போது பேனர்விழுந்ததில் உயிர் தப்பிய சிறுமி
தலைவாசல்,: வீரகனுார் பஸ் ஸ்டாண்டில் மழையின்போது, பேனர் விழுந்ததில் சிறுமி உயிர் தப்பினார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, வீரகனுார் பஸ் ஸ்டாண்டில், அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை, 6:30 மணியளவில் மழை பெய்தபோது, தம்மம்பட்டி செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்த, 10 வயது சிறுமி, அவரது தந்தையும் நின்றிருந்தனர். அப்போது, பஸ் ஸ்டாண்டில் வைத்திருந்த பேனர் கீழே விழுந்தபோது, சிறுமி கடைக்குள் சென்றுள்ளார்.
இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதே இடத்தில் நிறுத்தி வைத்திருந்த மொபட் சேதமடைந்தது. அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை, போலீசார் உள்ளிட்ட அலுவலர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலிதலைவாசல்: விவசாய தோட்டத்தில், மின் மோட்டார் எடுத்து விடுவதற்கு சென்ற ஆசிரியர், மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
தலைவாசல் அருகே, பகடப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன், 57. இவர், பெரம்பலுார் மாவட்டம், காரியானுார் ஜெயந்தி காலனி அரசு தொடக்கப்பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று தனது விவசாய தோட்டத்தில், பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மின்மோட்டார் 'ஸ்விட்ச்' போட்டபோது, மின்சாரம் தாக்கியதில், குணசேகரன் துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து, வீரகனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.