/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளாஸ்டிக் கழிவால் ஓடாத திருமணிமுத்தாறு
/
பிளாஸ்டிக் கழிவால் ஓடாத திருமணிமுத்தாறு
ADDED : மே 22, 2024 06:21 AM
சேலம், கந்தம்பட்டி பைபாஸ் அருகே, 5 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டி அதன் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் அங்குள்ள திருமணிமுத்தாற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலைகளில் கட்டப்பட்ட பாலத்தை சுற்றி, கட்டட ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதுதவிர பால கட்டுமானப்பணியின்போது தோண்டப்பட்ட மண், கற்கள், கட்டட கழிவு உள்ளிட்டவை அகற்றப்படாமல் அடைத்து, செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளன.
தற்போது சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஏற்காடு மலையில் இருந்து வரும் தண்ணீர், நகரின் மொத்த சாக்கடை கழிவுநீருடன் கலந்து திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழைநீரில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு, கந்தம்பட்டி பைபாஸ் சர்வீஸ் சாலை பாலம் அருகே, மேற்கொண்டு செல்ல முடியாமல் தேங்கி நீண்ட துாரத்துக்கு தேங்கியுள்ளது.
பாலத்துக்கும், ஆற்றுக்கும் இடையே, 4 அடிக்கு குறைந்த இடைவெளி மட்டும் உள்ளதால், தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அங்குள்ள அடைப்பால் கழிவுநீர், பாலத்தை மூழ்கடித்து விடும். இதன்மூலம் போக்குவரத்து பாதிக்கப்படும்.
குறிப்பாக சேலத்தில் நேற்று பெய்த மழையால் ஜருகுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி, 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே நிலை, கந்தம்பட்டி பைபாஸிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, இதுகுறித்து கந்தம்பட்டி பைபாஸ் பகுதி மக்கள் மனு அனுப்பினர்.
குறிப்பாக முதல்வரின் தனி பிரிவு, தலைமை செயலர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனுக்கள் அனுப்பியும், எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பாலத்தின் அடிப்பகுதியில் புதர்மண்டி உள்ள அடைப்புகளை உடனே அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், இந்த, 'ஓடாத' திருமணிமுத்தாறு ஓடும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் நீதிமன்றம், நீர்நிலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளதால், இங்குள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, திருமணிமுத்தாற்றில் தடையின்றி தண்ணீர் செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

