/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில மாரத்தானில் திருப்பூர் பெண் கலக்கல்
/
மாநில மாரத்தானில் திருப்பூர் பெண் கலக்கல்
ADDED : ஜன 29, 2024 10:59 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் அறக்கட்டளை சார்பில் மாநில அளவில் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. அதில், 688 வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளை, தனியார் நிறுவன அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைத்தனர். அதில் அனைவரும் ஆர்வத்துடன் இலக்கை நோக்கி ஓடினர். 42 கி.மீ., ஆண்கள் பிரிவில், 152 நிமிடத்தில் ஓடிய, திருவண்ணாமலையை சேர்ந்த சக்திவேல் முதலிடம் பிடித்தார்.
அடுத்தடுத்த இடங்களை, 156 நிமிடத்தில் ஓடிய மதுரை வினோத்குமார், 163 நிமிடத்தில் ஓடிய ஈரோடு சிவானந்தம் ஆகியோர் பிடித்தனர். இவர்கள் முறையே, 50,000, 30,000, 15,000 ரூபாய் பரிசு பெற்றனர். பெண்கள் பிரிவில் திருப்பூர் ஸ்வேதா, தஞ்சாவூர் சுகன்யா, அந்தியூர் வித்யா முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்து, பரிசுத்தொகையை பெற்றனர்.
அதேபோல், 21 கி.மீ., கொண்ட அரை மாரத்தான் ஆண்கள் பிரிவில், கோவை சதீஷ்குமார், சேலம் வடிவேல், கோவை அருண் ஆகியோரும், பெண்கள் பிரிவில், கோவை சவுமியா, திருச்சி கிருத்திகா, ஈரோடு பவித்ரா ஆகியோரும் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தவிர, 11, 6, 3 கி.மீ., போட்டிகள், பெரியவர்களுக்கு, 8 கி.மீ., நடைபயண போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், அங்குள்ள நாச்சியப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அறக்கட்டளை தலைவர் ஆயிகவுண்டர், செயலர் மணிசங்கர், சேலம் மாவட்ட அத்லெட்டிக் சங்க தலைவர் அகிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு மாரத்தான்
தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில், 'மனிதநேயம் காப்போம்' விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சேலத்தில் நேற்று நடந்தது. தலைவர் சேதுமாதவன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குனர் கவுதம், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காந்தி மைதானத்தில் புறப்பட்ட மாரத்தான், அம்பேத்கர் சிலை, வின்சென்ட், அஸ்தம்பட்டி சந்திப்பு, ராமகிருஷ்ணா சாலை, 4 ரோடு, அண்ணா பூங்கா வழியே வந்து, 6 கி.மீ., ஓட்டம் காந்தி மைதானத்தை அடைந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு, திரைப்பட நடிகை ரோகிணி பரிசு வழங்கினார்.