ADDED : அக் 16, 2026 02:57 AM
ஓமலுார்: புரட்டாசி, 5ம் சனியை முன்னிட்டு, காடையாம்பட்டி தாலுகா காருவள்ளியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நாளை தேரோட்டம் நடக்க உள்ளது.
இதனால் நேற்று காடையாம்பட்டி தாசில்தார் கருணாகரன் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில், 50 மீ.,க்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தி, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல்; பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திருத்தல்; கோவிலில் இருந்து சற்று தொலைவில், 'பார்க்கிங்' ஏற்படுத்தல் குறித்து தாசில்தார் அறிவுரை வழங்கினார். இன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், தேரை ஆய்வு செய்கின்றனர்.
சின்னதிருப்பதி
அதேபோல் சேலம், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நாளை மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது. இதற்கு தேர் அலங்கரித்து தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் செவ்வாய்ப்பேட்டை லட்சுமி நாராயணர் கோவிலில், நாளை காலை, 10:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது. உத்தமசோழபுரம் அழகிரிநாதர் கோவிலிலும் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
வெள்ளோட்டம்
தலைவாசல், இலுப்பநத்தத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவிலில், 80 ஆண்டுக்கு முன் தேர் திருவிழா நடந்தது. பின் விழா குழுவினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில், திருவிழா நடத்தப்படவில்லை. 30 ஆண்டுக்கு முன், பழைய தேரும் சிதிலமடைந்தது. இந்நிலையில் ஊர் முக்கிய பிரமுகர்கள் சேர்ந்து, தேர் திருவிழா நடத்த திட்டமிட்டனர். தொடர்ந்து, 40 லட்சம் ரூபாயில், 17.5 அடி உயரத்தில் தேர் வடிவமைக்கப்பட்டது. அதன் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. தேர் மீது கலசம் வைத்து, முக்கிய வீதிகள் வழியே ஏராளமான பக்தர்கள் இழுத்து வந்து வழிபட்டனர். வரும், 24ல், இக்கோவிலில் தேர் திருவிழா நடத்த, விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
