/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழில் முனைவோர் திறன் மேம்படுத்த பயிற்சி முகாம்
/
தொழில் முனைவோர் திறன் மேம்படுத்த பயிற்சி முகாம்
ADDED : டிச 09, 2024 07:22 AM
ஓமலுார்: சேலம் அரசு பொறியியல் கல்லுாரியில், 'ஒளி மையம்' தலைப்பில், தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்தல், தொழில் வல்லுனர்களிடமிருந்து மதிப்புமிக்க வழிகாட்டல் வாய்ப்புகளை வழங்கும் பயிற்சி நடந்தது. இதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, கல்லுாரி மாணவ தொழில் முனைவோருக்கான, 36 மணி நேர தொடர் பயிற்சி முகாம் நிறைவு விழா, பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பயிற்சியில் பங்கேற்ற, 60 மாணவ, -மாணவியருக்கும், புத்தொழில் நிறுவன ஸ்மார்ட் அட்டைகளை வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:
தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டங்கள், தொழில் முனைவோர் திட்டங்கள், அதிகளவில் செயல்படுத்தப்படுகின்றன. அகில இந்திய அளவில், அதிகளவு புத்தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில்தான் உள்ளன. தமிழக அளவில் சென்னை, கோவைக்கு அடுத்து, சேலம் உள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பு, இளம் இந்தியர்கள் உள்ளிட்ட அமைப்புகள், அரசுடன் இணைந்து உருவாக்கிடும் இதுபோன்ற வாய்ப்புகளை மாணவ, மாணவியர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் விஜயன், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இளம் இந்தியர்கள் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.