/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனித்துவ அடையாள எண் விவசாயிகளுக்கு 'கெடு'
/
தனித்துவ அடையாள எண் விவசாயிகளுக்கு 'கெடு'
ADDED : நவ 06, 2025 02:00 AM
சேலம், சேலம் மாவட்டத்தில், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவு சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று, தனித்துவ அடையாள எண் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இனி, மத்திய, மாநில அரசுகளின் வேளாண், அதை சார்ந்த அனைத்து மானியங்களும், தனித்துவ அடையாள எண்ணை அடிப்படையாக வைத்தே வழங்கப்படும். குறிப்பாக, 'பிஎம் கிசான்' திட்டத்தின், 21வது தவணை கவுரவ ஊக்கத்தொகை பெற, தனித்துவ அடையாள எண் கட்டாயம் தேவை.
மாவட்டத்தில், கடந்த பிப்., 10 முதல், அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்தி, விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள, 2,08,299 விவசாயிகளில் இதுவரை, 1,55,792 பேர், தனித்துவ எண்ணை பெற்றுள்ளனர். இது, 74.8 சதவீதம்.
விடுபட்ட விவசாயிகள், ஆதார், நில ஆவண நகல், ஆதார் இணைத்த மொபைல் எண் ஆகியவற்றுடன் பொது சேவை மையம் அல்லது வேளாண் உழவர் நலத்துறையின், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தின் முகாம்களுக்கு சென்று பதிவு செய்து, தனித்துவ அடையாள எண் பெறலாம். தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். தனித்துவ அடையாள எண் பெற வரும், 15 கடைசி நாள் என்பதால், விவசாயிகள் உடனே பதிவு செய்து கொள்ள வேண்டும் என, வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

