/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வழுக்குப்பாறை சூழல் சுற்றுலா' வனத்துறை மீண்டும் தொடக்கம்
/
'வழுக்குப்பாறை சூழல் சுற்றுலா' வனத்துறை மீண்டும் தொடக்கம்
'வழுக்குப்பாறை சூழல் சுற்றுலா' வனத்துறை மீண்டும் தொடக்கம்
'வழுக்குப்பாறை சூழல் சுற்றுலா' வனத்துறை மீண்டும் தொடக்கம்
ADDED : அக் 24, 2025 01:33 AM
ஓமலுார், 'வழுக்குப்பாறை சூழல் சுற்றுலா' திட்டத்தை, டேனிஷ்பேட்டை வனத்துறையினர் மீண்டும் தொடங்கியுள்ளனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில், ஏற்காடு அடிவாரப்பகுதியான உள்கோம்பையில், வனத்துறைக்கு சொந்தமான தடுப்பணை உள்ளது. அங்கு தான் மேற்கு சரபங்கா ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து, 3 கி.மீ., மலை ஏற்றத்துக்கு பின், வழுக்குப்பாறை உள்ளது. இந்த இடைப்பட்ட பகுதியில், இடதுபுறம் முழுதும் பாறைகளுக்கு இடையே தண்ணீர் வழிந்தோடும்.
இதனால், 6 ஆண்டுக்கு முன், 'வழுக்குபாறை சூழல் சுற்றுலா' திட்டத்தை, டேனிஷ்பேட்டை வனத்துறையினர் உருவாக்கி, சுற்றுலா பயணியரை அழைத்துச்சென்றனர். அப்போது ஏராளமானோர் கண்டுகளித்தனர். பின் மழையின்றி அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், அத்திட்டம் குறித்து, 10 நாட்களுக்கு முன், சேலம் மண்டல வன பாதுகாவலர் கலாநிதி, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி ஆய்வு செய்து, மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டனர். கடந்த சனி, ஞாயிறில், ஏராளமான சுற்றுலா பயணியர், மலை ஏறினர்.
இதுகுறித்து டேனிஷ்பேட்டை வனச்சரகர் விமல்குமார் கூறுகையில், ''உள்கோம்பையில் சுற்றுலா பயணியர் குளிக்க, 20 ரூபாய் கட்டணம். அங்கிருந்து, 3 கி.மீ., மலை ஏற்றம் சென்று வர, ஒருவருக்கு, 250 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலை ஏற்றத்தின்போது, வனத்துறையினர் அழைத்துச்சென்று, கீழே வரும் வரை உடனிருப்பர். இதுவரை, 250 பேர் வந்து சென்றுள்ளனர்,'' என்றார்.

