/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டுச்சாவடியில் மின்தடை வாக்காளர்கள் அவதி
/
ஓட்டுச்சாவடியில் மின்தடை வாக்காளர்கள் அவதி
ADDED : ஏப் 20, 2024 07:52 AM
வீரபாண்டி: வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது.
ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டனர். காலை, 9:30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. உடனே மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் விரைந்து வந்து, மின்மாற்றியில் ஏற்பட்டிருந்த கோளாறை சரிசெய்து மின்சாரம் வினியோகித்தனர். ஆனால், 5 ஓட்டுச்சாவடிகளில் ஒரு கட்டடத்தில் இருந்த இரு ஓட்டுச்சாவடிகளுக்கு மட்டும் மின்சாரம் வந்தது. மற்றொரு கட்டடத்தில் இருந்த, 3 ஓட்டுச்சாவடிகளில் மின்சாரம் வரவில்லை.இதனால் ஏற்கனவே வெப்பத்தை தாங்க முடியாமல் ஓட்டுச்சாவடியில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் மட்டுமன்றி வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்களும் அவதிப்பட்டனர். மேலும் விளக்கு எரியாததால் போதிய வெளிச்சமின்றி ஓட்டுப்போட சிரமப்பட்டதால், ஒவ்வொரு வாக்காளருக்கும் கூடுதல் நேரம் ஏற்பட்டது. மின் ஊழியர்கள் வந்து பார்த்தபோது மீட்டர் பெட்டி வரை மின்சாரம் வந்த நிலையில் அங்கிருந்து வகுப்பறைகளுக்கு செல்லும் ஒயர்களில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டிருந்தது தெரிந்தது. உடனே எலக்ட்ரீஷியன் வரவழைக்கப்பட்டு, சுவிட்ச் பாக்ஸ்களில் கொடுக்கப்பட்டிருந்த இணைப்புகளை நீக்கிவிட்டு நேரடியாக மீட்டர் பாக்சில் இருந்து புதிதாக ஒயர் கொடுத்து இணைப்பு கொடுக்கப்பட்டது. 2 மணி நேர மின்தடை சரியானது.

