ADDED : நவ 18, 2025 01:44 AM
ஏற்காடு,ஏற்காட்டில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ள கொளகூர், தாலுார்காடு மலை கிராமத்தை சேர்ந்த ராமநாதன் மகன் பாக்யராஜ், 34. இவருக்கு திருமணமாகி இரு மகள்கள், 1 மகன் உள்ளனர். மரம் வெட்டும் தொழில் செய்து வரும் இவர், வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்று கரடியூர் கிராமத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில், மரம் வெட்டி லாரியில் லோடு ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மதியம் 2 மணிக்கு எஸ்டேட்டை விட்டு வெளியே வரும்போது, லாரியின் மேல்புறம் பாக்யராஜ் மற்றும் சக தொழிலாளர்கள் 2 பேர் அமர்ந்து வந்தனர். லாரியை செம்மநத்தம் பகுதியை சேர்ந்த பூவேந்திரன், 48, ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, லாரிக்கு மேலே குறுக்கே சென்ற மின்கம்பி பாக்யராஜ் மீது மோதியதில், அவர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனிருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்சில் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

