/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரசாயன உரங்களை தவிர்த்து அங்கக உரங்களை பயன்படுத்துங்கள் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
/
ரசாயன உரங்களை தவிர்த்து அங்கக உரங்களை பயன்படுத்துங்கள் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
ரசாயன உரங்களை தவிர்த்து அங்கக உரங்களை பயன்படுத்துங்கள் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
ரசாயன உரங்களை தவிர்த்து அங்கக உரங்களை பயன்படுத்துங்கள் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
ADDED : ஆக 07, 2024 06:30 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் ரசாயன உரத்தை தவிர்த்து வேளாண்மைக்கு உயிர் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: உயர் விளைச்சல் ரகங்களுக்கு ரசாயன உரம் அதிகளவில் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கும். தொடர்ச்சியாக ரசாயன உரம் இடுவதால் மண்ணின் தன்மை மாறுபாடு அடைந்து மண்வளம் குன்றி, நுண்ணுயிர் அழிந்துவிடும். இதை தவிர்க்க உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்துவது அவசியம். பாஸ்போபேக்டீரியா மண்ணில் கிட்டா நிலையிலுள்ள மணிச்சத்தினை கரைத்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்க செய்யும். பொட்டாஷ் பாக்டீரியா மண்ணில் உள்ள சாம்பல் சத்தை பிரித்து பயிர்களுக்கு தருகிறது. துத்தநாக சத்தை கரைத்து கொடுக்க கூடிய பாக்டீரியா மூலம் மண்ணில் கரையாத நிலையில் உள்ள துத்தநாக சத்தினை அளிக்கிறது. மேலும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை 25 சதவீதம் வரை குறைக்கலாம். திரவ உயிர் உரங்கள் பயிரின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துவதுடன், பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் உற்பத்தி செய்து பயிர் வளர்ச்சியினை துரிதப்படுத்துகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நெல் மற்றும் இதரப்பயிர் வகைகளுக்கு தழைச்சத்தை அளிக்க கூடிய அசோஸ்பைரில்லமும், பயறுவகை மற்றும் நிலக்கடலைக்கு தழைச்சத்து அளிக்க கூடிய ரைசோபியமும், பயிர்களுக்கு மணிச்சத்து அளிக்கும் பாஸ்போபாக்டீரியா, தழைச்சத்து மற்றும் மணிச்சத்து ஆகியவற்றை ஒருங்கே பயிர்களுக்கு வழங்க கூடிய அசோபாஸ் மற்றும் சாம்பல் சத்தை பயிர்களுக்கு வழங்கும் திரவ பொட்டாஷ் பாக்டீரியா துத்தநாக சத்தினை கரைத்து அளிக்க கூடிய பாக்டீரியா என ஒன்பது வகையான திரவ உயிர் உரங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்க கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய வெப்பம் படாமல் பாதுகாத்து வைக்க வேண்டும்.
விதைகளை பூஞ்சான கொல்லியுடன் விதை நேர்த்தி செய்து பின்பு கடைசியாக உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இத்திரவ உயிர் உரங்கள் 500 மில்லி அளவுள்ள கொள்கலன் ஒன்றின் விலை ரூ.150. எனவே விவசாயிகள் திரவ உயர் உரங்களை பயன்படுத்தி மண் வளம் காத்து அதிக மகசூல் பெற்று பயன் பெற வேண்டும், என்றார்.