/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விதிகளை மீறிய மண் குவாரிகளால் விவசாயிகள் தவிப்பு
/
விதிகளை மீறிய மண் குவாரிகளால் விவசாயிகள் தவிப்பு
ADDED : மே 25, 2024 05:14 AM

பூவந்தி : பூவந்தி அருகே விதிகளை மீறி மண் அள்ளிய குவாரிகளால் வயல்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு மழை நீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் கிளாதரி, லட்சுமிபுரம், அரசனுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் தர்ப்பூசணி, பஜ்ஜி மிளகாய், கொய்யா, வெள்ளப்பூசணி, பப்பாளி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.
150 ஏக்கரில் இந்த பழ வகை விவசாயம் நடைபெறுகின்றன. பெரியாறு பாசன கால்வாய் மூலம் தண்ணீர் வர வாய்ப்பு இருந்தாலும் கால்வாய் அனைத்தும் சேதமடைந்து விட்டதால் மழை தண்ணீரை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. மழை காலங்களில் நீர் வரத்து கால்வாய் மூலம் ஆங்காங்கே உள்ள பள்ளங்கள், கண்மாய்களில் தண்ணீர் தேங்கும் அதன் மூலம் கிணறுகளில் நீர்மட்டம் உயரும், சிவகங்கை மாவட்ட எல்லையோர கிராமம் என்பதால் இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டன.
செம்மண், கிணற்று மண் என அனைத்து மண்ணும் அள்ளப்பட்டு விட்டன. மூன்று அடி ஆழம் தான் அள்ள வேண்டும் என்ற விதிகளை மீறி பல அடி ஆழம் வரை பல இடங்களில் மண் அள்ளப்பட்டதால் மழை காலங்களில் கண்மாய், பள்ளங்களுக்கு தண்ணீர் வராமல் குவாரி பள்ளங்களில் தேங்கி விடுகிறது.
மேலும் பாறைகள் தெரியும் அளவிற்கு மண் அள்ளியதால் குவாரி பள்ளங்களில் தண்ணீர் தேங்கினாலும் நிலத்தடி நீர் மட்டம் உயருவது இல்லை. குவாரி அனுமதி பெற்றவர்கள் விதிகளை மீறி மண் அள்ளி விவசாயத்தை பாழாக்கி விட்டனர்.
கிளாதரி பகுதிகளில் உள்ள குவாரிகளை எந்த அதிகாரிகளும் ஆய்வு செய்ததில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் இந்தாண்டு தர்ப்பூசணி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கேரளா மட்டுமல்ல உள்ளுர் விற்பனைக்கு கூட தர்ப்பூசணி விளைச்சல் இல்லை.
மாவட்ட நிர்வாகம் கிளாதரியில் மண் குவாரி அமைக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

