/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உழவர் சந்தைகள் முடக்கம் 194 கடைகளில் 124 மூடல்
/
உழவர் சந்தைகள் முடக்கம் 194 கடைகளில் 124 மூடல்
ADDED : செப் 12, 2024 04:45 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் காய்கறி மற்றும் மக்கள் வருகை குறைவால் 5 உழவர் சந்தைகளில் உள்ள 194 கடைகளில் 124 செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது.
மாவட்டத்தில் வேளாண்மை மார்க்கெட்டிங் துறை சார்பில், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி, திருப்புத்துார் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது.
இங்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்ய, 194 கடைகள் கட்டித்தரப்பட்டுள்ளன. விவசாயிகள் பயிரிடும் காய்கறிகள் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு உழவர் சந்தைக்கு 1.5 முதல் 2 டன் வரை காய்கறி வரத்து உள்ளது.
உழவர் சந்தை துவக்கப்பட்ட காலத்தில் விவசாயிகள் அதிகளவில் தோட்டக்கலை பயிர்களான காய்கறி, கீரை உள்ளிட்ட வகைகளை அதிகளவில் பயிரிட்டு, அறுவடை செய்தனர். ஒரு சந்தைக்கே 5 டன் வரை காய்கறி வரத்து இருந்தன. காலப்போக்கில் உழவர் சந்தைக்கு விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருவது குறைந்து விட்டது.
மேலும், தண்ணீர் தட்டுப்பாடு, விவசாய கூலி தட்டுப்பாடு, கடும் வறட்சி போன்ற காரணத்தால், விவசாயிகள் நாளுக்கு நாள் காய்கறிகள் பயிரிடுவதை குறைத்து கொண்டனர். இதனால், உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தும் குறைந்துவிட்டன.
காரைக்குடியில் 60 கடைக்கு 53, தேவகோட்டையில் 40 கடைக்கு 34, சிவகங்கையில் 57 கடைக்கு 21, சிங்கம்புணரியில் 20 கடைக்கு 10, திருப்புத்துாரில் 17 கடைக்கு 6 கடைகள் என ஒட்டு மொத்தமாக 194 கடைகளுக்கு 124 கடைகள் செயல்படவில்லை. இச்சந்தைக்கு வருவதாக மாவட்ட அளவில் 1445 விவசாயிகள் பதிவு செய்திருந்தனர்.
அவர்களும் தற்போது குறைந்து விட்டனர். காய்கறி வரத்து குறைவால், மக்களும் உழவர் சந்தைக்கு வருவதை குறைத்துவிட்டனர். நலிவடைந்து வரும் உழவர் சந்தையை புத்துயிர் பெற செய்ய, காய்கறி விளைச்சலை அதிகரித்து, உழவர்சந்தைக்கு விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை கொண்டு வர செய்ய வேளாண்மை மார்க்கெட்டிங் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.